2018-02-02 15:29:00

திருத்தந்தையின் ஆண்டு தியானம் : கிறிஸ்துவின் தாகம்


பிப்.02,2018. இம்மாதம் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளும் மேற்கொள்ளும் ஆண்டு தியானம், ‘கிறிஸ்துவின் தாகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞரும், விவிலிய இறையியலாளருமான, போர்த்துக்கீசிய அருள்பணியாளர், José Tolentino de Mendonça அவர்கள், இந்தத் தியானச் சிந்தனைகளை வழங்கவுள்ளார். இவர், லிஸ்பன் நகரிலுள்ள போர்த்துக்கீசிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் உதவி அதிபராவார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஏப்ரல் 20, வெள்ளிக்கிழமையன்று, இத்தாலியின் Alessano, Molfetta ஆகிய நகரங்களுக்கும், மே 10, வியாழக்கிழமையன்று, இத்தாலியின் Nomadelfia நகரத்திற்கும் மேய்ப்புப்பணி பயணங்கள் மேற்கொள்வார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர், கிரெக் பர்க் அவர்கள், இவ்வெள்ளியன்று அறிவித்தார்.

ஆயர் தொனினோ பெல்லோ அவர்கள் காலமானதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, Alessano, Molfetta ஆகிய நகரங்களுக்குச் செல்கிறார் திருத்தந்தை.

Molfettaவில், 1993ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி காலமான ஆயர் தொனினோ அவர்கள், இத்தாலிய தேசிய கலாச்சார அமைதி விருதைப் பெற்றிருப்பவர் மற்றும், இவரை முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மே பத்தாம் தேதியன்று, Nomaldelfiaவில், அருள்பணியாளர் Zeno Saltini அவர்கள் ஆரம்பித்த குழுவையும், பிளாரன்ஸ் நகர்ப்பகுதியிலுள்ள Loppianoவில், உலகளாவிய Focolari இயக்கத்தின் மையத்தையும் திருத்தந்தை பார்வையிடுவார் என்றும், கிரெக் பர்க் அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.