2018-02-02 15:16:00

உண்மை ஒளியாகிய கிறிஸ்துவிடம் அனைவரும் வருவார்களாக


பிப்.02,2018. “உண்மை ஒளியாகிய கிறிஸ்துவிடம், அனைத்து மனிதரும் வருவார்களாக; நீதி மற்றும் அமைதியின் பாதை வழியாக, உலகம் முன்னோக்கிச் செல்வதாக” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியாயின.

இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழா மற்றும், அர்ப்பண வாழ்வு வாழ்வோரின் 22வது உலக நாளான, பிப்ரவரி 02, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விழா நாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளிட்டுள்ளார்.

இவ்வெள்ளி மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஆயிரக்கணக்கான இருபால் துறவியருக்கு, இவ்விழா திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறையழைப்பு, ஆண்டவரிடமிருந்து பெற்ற ஒரு கொடை என்றும், நம் ஆண்டவர், நம்மை உற்றுநோக்கி, அர்ப்பண வாழ்வில் தம்மைப் பின்செல்ல அழைக்கின்றார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உலக நாளுக்கென வழங்கிய செய்தியில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ப்பண வாழ்வு வாழ்வோர்க்காக, உலகினர் அனைவரும் செபிக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தி, 1997ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இயேசு ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழா நாளை, அர்ப்பண வாழ்வு வாழ்வோரின் உலக நாளாக அறிவித்தார்.

மேய்ப்புப்பணி நோக்கங்களுக்காக, இந்த உலக நாள், பங்குத்தளங்களில், பிப்ரவரி 2ம் தேதிக்கு அடுத்து வருகின்ற ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.