2018-02-01 13:42:00

திருத்தந்தை: இன்று என்னை இறைவன் தன்னிடம் அழைத்தால்...


பிப்.01,2018. எதிர்காலம் ஏதுமின்றி, சுழன்று, சுழன்று செல்லும், சுயநலம் என்ற சிக்கல் வழியில், வாழ்வை நடத்திச்செல்லும் சோதனைக்கு நம்மையே உட்படுத்திக் கொண்டால், அந்தப் பயணம், மரணத்தில் தான் முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் வழங்கிய மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

தன் மரணம் நெருங்கி வருவதை உணர்ந்த தாவீது, மகன் சாலமோனிடம் கூறும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள இன்றைய வாசகத்தை மையப்படுத்தி, திருத்தந்தை, தன் மறையுரையை வழங்கினார்.

மரணத்தைக் குறித்து சிந்திக்க வேண்டும் என்று திருஅவை நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை, இன்று என்னை இறைவன் தன்னிடம் அழைத்தால், நான் விட்டுச் செல்லும் நினைவுகள் எத்தகையதாக இருக்கும் என்ற கேள்வியை அனைவரும் அடிக்கடி எழுப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இறந்தபின், நாம் அனைவருமே புனித பொருள்களாக மாறப்போவதில்லை, அந்த வரம் ஒரு சிலருக்கே வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் விட்டுச் செல்லும் நினைவுகள், பலருக்கு உதவியாக இருக்கும் என்பதையும் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு முடிவையும் நாம் எடுக்கும்போது, இதுவே என் இறுதி முடிவு என்ற எண்ணம் எழுந்தால், அந்த முடிவை எவ்வித இறை ஒளியுடன் நாம் எடுக்கப்போகிறோம் என்ற கேள்வியுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

மேலும், "நம்மை எவ்வகையிலும் தொந்தரவு செய்யாத நம்பிக்கை, தொந்தரவு மிகுந்த நம்பிக்கையாக இருக்கும். நம்மை வளர்க்காத நம்பிக்கை, வளரவேண்டிய அவசியம் கொண்டதாக உள்ளது" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.