2018-02-01 14:45:00

உரோம் புனித படிக்கட்டுகள் ஓராண்டளவாக மூடப்பட்டிருக்கும்


பிப்.01,2018. கிறிஸ்து தன் பாடுகளின்போது, எருசலேமில், பிலாத்துவின் மாளிகையில் ஏறிச்சென்ற படிக்கட்டுகள் புனித படிக்கட்டுகள் என்று உரோம் நகரில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

திருப்பயணிகளின் ஒரு முக்கிய தலமாக விளங்கும் இந்த படிக்கட்டுகளை புனரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளதால், இந்த படிக்கட்டுகள் ஓராண்டளவாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கும் பணியின் முக்கியப் பகுதியாக, இந்தப் படிக்கட்டுகளைச் சுற்றி வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சுத்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புனிதப் படிக்கட்டுகள், பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்களின் அன்னை புனித ஹெலன் அவர்களால், 4ம் நூற்றாண்டில், உரோம் நகருக்குக் கொண்டுவரப்பட்டது என்பது மரபு.

பளிங்கினால் ஆன இந்தப் படிக்கட்டுகள் மரச்சட்டங்களால் மூடப்பட்டு, அவற்றில் திருப்பயணிகள் முழந்தாள் படியிட்ட வண்ணம் ஏறிச்செல்வது வழக்கம்.

புனரமைக்கும் பணிகள் நடைபெறும் வேளையில், இந்தப் படிக்கட்டுகளுக்கு அருகே உள்ள ஏனைய படிக்கட்டுகளை திருப்பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.