2018-01-31 15:06:00

இமயமாகும் இளமை.........: சமூக நலனில் ஆர்வம் கொண்ட இளையோர்


21 வயது நிரம்பிய மோகன் சொன்னார், 'நான் வாரத்தில் ஆறு நாட்களும் கல்லூரிக்குச் சென்று வருகிறேன். ஏனென்றால் சனிக்கிழமையும் எனக்கு சிறப்பு வகுப்புகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனெனில் அன்றுதான் நான் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைக்க முடிகிறது’ என்று. முதலில் புரியவில்லை. பிறகு மோகனே சொன்னார், ‘குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், மாற்றுத் திறனாளிகள் காப்பகம் மற்றும் விசேட தேவையுடைய குழந்தைகளுடன் என்னைப் போன்ற இளையோர் மற்றும் மாணவர்கள் ஞாயிறு தோறும் தங்கள் நேரத்தை ஆக்கபூர்வமாகச் செலவழித்து மகிழ்ந்து, மகிழ்வித்து வருகின்றோம்’ என்று.

ஆம், இந்த இளையோர், கேர் அண்ட் வெல்பேர் (Care and Welfare) என்ற தன்னார்வல அமைப்புடன் இணைந்து பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த இளையோர் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் காப்பகங்களுக்குச் சென்று, அவர்களுக்குத் தேவையான பாடங்களைக் கற்பித்தல், விளையாடுதல், கதைகள் சொல்லுதல் என, அவர்களை மகிழ்விக்கும் விதமாக தங்களின் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். காப்பகங்களில் உள்ளவர்களை முடிந்தவரை நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது மட்டும்தான் இவர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இரத்த தான சேவை, உறுப்பு தான விழிப்புணர்வு, வரதட்சணை கொடுமைக்கு எதிராக பிரச்சாரம், சுற்றுப்புற தூய்மை, மரம் நடுதல், திருநங்கைகளுக்கு மறுவாழ்வு, ஆதரவற்றோர்களுக்கு மறுவாழ்வு போன்ற பல்வேறு விதமான சமூக மாற்றத்திற்கான விழிப்புணர்வுகளையும், கேர் அண்ட் வெல்பேர் (Care and Welfare) அமைப்பினர் செய்து வருகிறார்கள்.

இந்த மகத்தான சேவைக்கு ஒவ்வொரு வாரமும், ஏறத்தாழ ஐந்து மணி நேரத்தை செலவழிப்பதன் வழியாக, தாங்களும் சமூக மாற்றத்திற்கு பங்களிக்க முடியும் என உறுதியாக நம்புகின்றனர், இந்த மோகனையொத்த இளையோர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

 








All the contents on this site are copyrighted ©.