2018-01-29 17:00:00

திருமண தம்பதியருக்கு, அருளின் பாதையை திறந்து விடுங்கள்


சன.29,2018. திருமண வாழ்வில் பிரச்னைகளை எதிர்நோக்கும் தம்பதியரை, அருளின் பாதையருகே அழைத்து வருவது குறித்தும், திருமணம் புரியவிருப்பவர்களுக்கு திருமணம் குறித்த மறைக்கல்வியை வழங்குவதன் அவசியம் குறித்தும் இத்திங்களன்று, திருப்பீட உச்ச நீதிமன்ற அதிகாரிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ரோத்தா ரொமானா என்ற திருப்பீட நீதித் துறையின் ஆண்டு துவக்கத்தையொட்டி, அவர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமண வாழ்வில் பிரச்சனைகளை எதிர்நோக்கும் தம்பதியருக்கு, அருளின் பாதை மூடப்படக் கூடாது என்பதில் திரு அவை அதிகாரிகள் உறுதியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

துன்பத்திலிருக்கும் தம்பதியருக்கு செவிமடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ மனச்சான்றைக் கட்டியெழுப்புவதில், தம்பதியருக்கு உதவ வேண்டியதையும் தன் உரையில் வலியுறுத்திய திருத்தந்தை, கடவுளின் திட்டப்படி குடும்பம் கட்டப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நற்செய்தி மதிப்பீடுகளால் ஒளியேற்றப்பட்ட கிறிஸ்தவ மனச்சான்றை மீட்டெடுத்து, அதற்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது, திருஅவையின் மேய்ப்புப்பணி கடமையாகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.