2018-01-27 15:03:00

யூத இன ஒழிப்பு நினைவு நாளுக்கென டுவிட்டர் செய்தி


சன.27,2018. “மனித சமுதாயம் ஆற்றியுள்ள செயல்களை நினைத்து வெட்கமடைகின்றோம், ஆண்டவரே, உமது உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்ட எங்களை உம் இரக்கத்தில் நினைவுகூர்ந்தருளும்” என்று, இச்சனிக்கிழமையன்று மன்றாடியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 27, இச்சனிக்கிழமையன்று, யூத இன ஒழிப்பு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, தன் டுவிட்டரில் இவ்வாறு செபித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இந்நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனி கூட்டேரெஸ் அவர்கள், மனித சமுதாயத்தின் விழுமியங்கள் புறக்கணிக்கப்படும்போது, நாம் எல்லாரும் ஆபத்தில் இருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.

இனப்பாகுபாட்டையும், வன்முறையையும் எதிர்ப்பதற்கு உலகினர் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும், இரண்டாம் உலகப் போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், முற்சார்பு எண்ணங்களின் பல வடிவங்கள், உலகில் அதிகரித்து வருகின்றன என்றும், கவலை தெரிவித்துள்ளார், கூட்டேரெஸ்.

ஹிட்லரின் நாத்சி கொள்கைகளால், இரண்டாம் உலகப் போரின்போது, அறுபது இலட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் சனவரி 27ம் நாளன்று, யூத இன ஒழிப்பு உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.