2018-01-27 15:43:00

சிறுபான்மை கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்


சன.27,2018. இந்தியாவிலுள்ள சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினர், ஒன்றிணைந்து வாழ வேண்டுமென்று, புதுடெல்லியில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கேட்டுக்கொண்டார், டெல்லி பேராயர் அனில் கூட்டோ.

‘மோதல்கள் முதல், ஒன்றிப்பு வரை’ என்ற தலைப்பில், பேராயர் அனில் கூட்டோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் செப நிகழ்வில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த ஏறத்தாழ 200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கத்தோலிக்கத் திருஅவையில் புதுப்பித்தலைக் கொணரும் நோக்கத்தில், மார்ட்டின் லூத்தர் ஆரம்பித்த சீர்திருத்த நிகழ்வின் 500ம் ஆண்டு இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் அனில் கூட்டோ அவர்கள், பல்வேறு கிறிஸ்தவ சபைகள் பற்றிய சரியான புரிதல் இல்லாத இந்தியா போன்ற நாடுகளில், கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் என்று கூறினார்.

130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், 2 கோடியே 70 இலட்சம் பேர், அதாவது 2.3 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாகிஸ்தான் ஆயர் பேரவையின் பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு  பணிக்குழு, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு, செப நிகழ்வு ஒன்றை நடத்தி, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டுமென்று செபித்துள்ளது. இவ்விரு நாடுகளும் பிரிந்து எழுபது ஆண்டுகளுக்குமேல் ஆகியுள்ள இவ்வேளையில், ஒப்புரவு இயலக்கூடியதே என்றும், இச்செப நிகழ்வில் கூறப்பட்டது என, பீதேஸ் செய்தி கூறியுள்ளது.   

ஆதாரம் : UCAN/Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.