2018-01-27 13:57:00

இமயமாகும் இளமை: ஆனந்த அதிர்ச்சி தரும் இந்தியத் தலைவர்


அண்மையில், தமிழகத்தில், இரு நடிகர்கள், அரசியல் வாழ்வில் நுழையவிருப்பதாக அறிவித்துள்ளனர். இவ்விருவரையும் நம்பி, தங்கள் வாழ்வை பணயம் வைக்கக் காத்திருக்கும் இளையோருக்கு, உண்மையான ஓர் அரசியல் தலைவரை அறிமுகம் செய்துவைக்கும் ஒரு முயற்சி இது:

இந்தியாவில், திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாளர் மானிக் ஷொர்கார் (Manik Sarkar) அவர்களைப் பற்றிய விவரங்கள், நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சொந்த வீடோ, காரோ, செல்லிடப்பேசியோ இல்லாதவர் இவர். பாதுகாப்புப் படை ஏதுமின்றி மாநிலத்தில் வலம் வருபவர். வங்கிக் கணக்கில் இவரிடம் உள்ள தொகை, ரூபாய் 10,000க்கும் குறைவு.

சனவரி 26, இந்தியா, குடியரசு நாளைக் கொண்டாடியபோது, பல தலைவர்கள், தாங்கள் கனவுகாணும் இந்தியா எப்படிப்பட்டது என்று தங்கள் உரைகளில் முழங்கியிருப்பர். இந்நேரத்தில், 2017ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, இந்திய சுதந்திர நாளன்று, மானிக் ஷொர்கார் அவர்கள் தான் காணவிழையும் இந்தியாவைக் குறித்து, அழகான உரை வழங்கினார். அவர் வழங்கிய உரையிலிருந்து ஒரு சில வரிகள் இதோ:

"வேற்றுமையில் ஒற்றுமை என்பது, இந்தியாவின் பாரம்பரியக் கருவூலம். மத சார்பற்ற நிலையே, இந்தியாவை ஒன்றுபட்ட நாடாக இதுவரை இணைத்து வந்துள்ளது. ஆனால், இன்று, மதசார்பற்ற நிலை தாக்கப்பட்டு வருகிறது. மதம், சாதி, சமுதாயம் ஆகியவற்றின் பெயரால், தேசிய உணர்வு தகர்க்கப்படுகிறது. இந்த நாட்டை, ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய நாடாக மாற்றவும், பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயராலும், மக்களின் உணர்ச்சிகள், தவறான முறையில் தூண்டிவிடப்படுகின்றன. நாட்டை அழிக்கும் இந்தச் சதித்திட்டங்களுக்கு எதிராக, உண்மையான நாட்டுப்பற்று கொண்ட அனைவரும் இன்று உறுதியெடுக்க வேண்டும்" என்று திரிபுரா மாநில முதலமைச்சர் உரை வழங்கினார். அவரது உரையை, இந்திய தொலைக்காட்சியும், வானொலியும் ஒளி, ஒலிபரப்ப மறுத்துவிட்டன.

இறைவாக்கினருக்குரிய துணிவுடன், இன்றைய இந்தியாவின் உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டிய மானிக் ஷொர்கார் அவர்களைப் போல், இறைவாக்கினர்களாக வாழும் பல தலைவர்கள் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காமல், நாளையத் தலைவர்களான இளையோருக்கு நல்வழி காட்டும் இத்தகையத் தலைவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.