2018-01-26 15:26:00

புதிய சவால்களை ஏற்க திருத்தந்தை ஊக்கம்


சன.26,2018. பாப்பிறை இறையியல் கழகத்தின் ஐம்பது உறுப்பினர்களை,  இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கழகம், தன் பணிகளில், கடந்த மூன்று நூற்றாண்டுகளாக குறிப்பிடத்தக்க மைல்கல்லை நாட்டியுள்ளது என்று சொல்லி, இக்கழகம் ஆற்றிவரும் பணிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

1718ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று, திருத்தந்தை 11ம் கிளமென்ட அவர்களால் உருவாக்கப்பட்ட இக்கழகத்தின் அமைப்புமுறை மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், இக்கழகம், கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட இறைவனின் மீதுள்ள விசுவாசத்தை ஊக்குவிப்பதில், திருஅவைக்குத் தொடர்ந்து உதவி வருகின்றது என்று கூறினார், திருத்தந்தை.

திருஅவையின் போதனைகளுக்கு விசுவாசமாக இருந்து, மாறிவரும் கலாச்சாரம் முன்வைக்கும் சவால்களுக்குத் திறந்தமனதுடன், புதிய சூழல்களில் நற்செய்தியை அறிவிப்பதற்கு, பாப்பிறை இறையியல் கழகம் உதவி வருகின்றது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, விசுவாசத்திற்கும், புதிய கலாச்சாரத்திற்குமிடையே பலனுள்ள சந்திப்புக்களை ஊக்குவிப்பதைத் தொடர்ந்து நடத்துமாறும் கூறினார்.

இக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், உரோம் பல்கலைக்கழகங்கள் மற்றும், உரோம் பாப்பிறை இறையியல் கல்லூரிகளுடன் தொடர்புகொண்டு செயலாற்றி வருகின்றது  என்றும் பாராட்டிய திருத்தந்தை, அறிவென்னும் பரந்த நிலத்தில், நற்செய்தியின் நல்விதைகளை விதைப்பதற்கு, இக்கழகம், கல்வி நிறுவனங்களுடன் தொடர்ந்து உறவை வளர்த்துக்கொள்ளுமாறும், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.