2018-01-25 15:42:00

குடும்பங்களின் 9வது உலக மாநாட்டின் விவரங்கள் வெளியீடு


குடும்பங்களின் 9வது உலக மாநாட்டின் விவரங்கள் வெளியீடு

 

சன.25,2018. இவ்வாண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல், 26ம் தேதி முடிய, அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் நடைபெறும் குடும்பங்களின் 9வது உலக மாநாட்டைக் குறித்த விவரங்கள், சனவரி 25, இவ்வியாழனன்று செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கெவின் பாரெல் (Kevin Farrell) அவர்கள் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், இந்த உலக மாநாட்டின் உரைகள், ஓவியங்கள், காணொளித் தொகுப்புக்கள் அடங்கிய வலைத்தளம் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

குடும்பங்களின் உலக மாநாட்டைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி வெளியிட்ட ஒரு மடலில், இந்த மாநாட்டில் "அன்பின் மகிழ்வு" என்ற திருமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் ஆழப்படுத்தப்படுவதை தான் விரும்புவதாக தெரிவித்திருந்ததை, கர்தினால் பாரெல் அவர்கள் எடுத்துரைத்தார்.

சிறுவன் இயேசு, 12 வயதில் எருசலேம் கோவிலில் காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வையும் (லூக்கா 2:41-52), நாசரேத்தில் திருக்குடும்பம் மேற்கொண்ட வாழ்வையும் மையப்படுத்தி, இந்த மாநாட்டில் ஏழு மறைக்கல்வி உரைகளும், விவாதங்களும் நடைபெறும் என்று, கர்தினால் பாரெல் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாநாட்டில் நடைபெறவிருக்கும் மறைக்கல்வி உரைகளும், திருவழிபாட்டு இசையும், மற்றும் சில காணொளி தொகுப்புக்களும் பிப்ரவரி 2ம் தேதி முதல், பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் வலைத்தளத்தில் கிடைக்கும் என்று, கர்தினால் பாரெல் அவர்கள் அறிவித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.