2018-01-25 15:39:00

Gaudium et Spes பெயரால் புதுத் துறை - திருத்தந்தை வாழ்த்து


சன.25,2018. 1958ம் ஆண்டு சனவரி 25ம் தேதி, திருத்தந்தை புனித 23ம் ஜான், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூடுவதற்காக விடுத்த அழைப்பு, திருஅவையையும், இவ்வுலகையும் வியப்பில் ஆழ்த்தியது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட ஒரு மடலில் கூறியுள்ளார்.

அறிவியல், திருமணம், குடும்பம் ஆகிய பணிகளை ஒருங்கிணைக்கும் 2ம் ஜான்பால் பாப்பிறை இறையியல் நிறுவனம், 'மகிழ்ச்சியும் எதிர்நோக்கும்' அல்லது, 'இன்றைய உலகில் திருஅவை' என்றழைக்கப்படும் Gaudium et Spes என்ற சங்க ஏட்டின் பெயரால், ஒரு புதுத் துறையை, இவ்வியாழனன்று துவங்கும் வேளையில், இந்த முயற்சியைப் பாராட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள ஒரு மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா (Vincenzo Paglia) அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இம்மடலில், இரண்டாம் வத்திக்கான் சங்கம் உருவாக்கிய தலைசிறந்த ஏடுகளில், Gaudium et Spes ஏடு, தனியிடம் வகிக்கிறது என்று கூறியுள்ளார்.

Gaudium et Spes ஏடு உருவாக காரணமான குழுவில் திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் பங்கு பெற்றதால், அந்த ஏடு தன் மனதுக்கு நெருக்கமான ஏடு என்பதை அவரே பலமுறை தன் வாழ்வில் குறிப்பிட்டுள்ளார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருஅவை சந்திக்கும் மேய்ப்புப்பணி சவால்களில் குடும்பம் முக்கியமான இடம் வகிக்கிறது என்பதால், Gaudium et Spes பெயரால் உருவாக்கப்பட்டுள்ள புதிய துறை, இந்த சவால்களை எதிர்நோக்க உதவியாக இருக்கும் என்று, திருத்தந்தை தன் மடலில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ மீட்பை உலகெங்கும் பறைசாற்ற, திருத்தூதர் பவுலை இறைவன் தேர்ந்தெடுத்த திருநாளன்று உருவாக்கப்படும் இந்தப் புதிய துறை, மீட்பளிக்கும் அன்பின் அழகை, உலகெங்கும் காணக்கூடிய வகையில் செயலாற்றும் என்ற தன் நம்பிக்கையை வெளிப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மடலை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.