2018-01-24 15:21:00

திருத்தந்தை - மனிதர்கள், மத நம்பிக்கைக்காக துன்புறுவது அநீதி


சன.24,2018. உலகெங்கும் வாழும் Yezidi இனத்தைச் சார்ந்தவர்களை, குறிப்பாக, ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் வாழும் Yezidi இனத்தவரை நான் வாழ்த்துகிறேன், என் உள்ளத்தால் அரவணைக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த Yezidi குழுமத்தின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

சனவரி 24, இப்புதன் காலை, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கச் செல்வதற்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் அமைந்திருந்த ஓர் அறையில், ஜெர்மன் நாட்டில் வாழும் Yezidi குழுமத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

Yezidi இனத்தவர், பொருள் செறிவு மிக்க ஒரு கலாச்சாரத்திற்கு உரிமையாளர்கள் என்று கூறியத் திருத்தந்தை, இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள், மிகக் கொடுமையான வன்முறைகளைச் சந்தித்துள்ளனர் என்பதையும் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மனிதர்கள், தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைகளுக்கு உள்ளாவது, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட இயலாத அநீதி என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய வன்முறைகளுக்கு எதிராக குரல்கொடுக்க திருஅவை என்றும் தயங்காது என்பதையும் தெளிவுபடுத்தினார்.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் வன்முறையாளர்கள் கரங்களில் சிக்கியுள்ள Yezidi மக்களை தான் நினைவில் கொள்வதாகவும், இந்த  இனத்தைச் சார்ந்த மக்கள் தங்கள் முழு உரிமைகளையும் பெறுவதற்கு தான் மீண்டும் குரல் எழுப்புவதாகவும் திருத்தந்தை இந்தச் சந்திப்பின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.