2018-01-23 14:52:00

டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி


சன.23,2018. ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கு உண்மையான வாய்ப்புக்களை அனைத்து மக்களுக்கும் வழங்குவது, மனிதரின் மாண்பு பாதுகாக்கப்படுவதற்கு, மிகவும் முக்கியமானது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக பொருளாதார மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், சனவரி 23, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள உலக பொருளாதார மாநாட்டிற்கான செய்தியை, உலக பொருளாதார அவையின் செயல்திட்ட தலைவர் பேராசிரியர் Klaus Schwab அவர்களுக்கு அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

துண்டுபட்டுள்ள உலகில் பகிர்ந்துகொள்ளப்படும் வருங்காலத்தை உருவாக்குதல் என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெறுவதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இது காலத்திற்கேற்ற தலைப்பு என்றும், உலக அளவில் நிர்வாகத்தை நோக்கும்போது, நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே பிளவுகள் வளர்ந்து வருவதைக் காண முடிகின்றது என்றும் கூறியுள்ளார்.

நிதி சார்ந்தவைகளில் காணப்படும் நிலையற்றதன்மைகள், புதிய பிரச்சனைகளைக் கொண்டுவந்துள்ளன என்றும், வேலைவாய்ப்பின்மையும், சமூக-பொருளாதார இடைவெளியும், வறுமையின் பல்வேறு நிலைகளும், அடிமைமுறையின் புதிய வடிவங்களும், இன்னும் பல்வேறு சமூகப் பிரச்சனைகளும் அதிகரித்து வருவது அரசுகளுக்குக் கடும் சவால்களாக உள்ளன என்றும் அச்செய்தி கூறுகிறது.

மனிதர்கள், நுகர்வுப் பொருள்களாக நடத்தப்பட்டு, உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, குடும்பங்களுக்கு ஆதரவாக கொள்கைகள் அமைக்கப்படுவதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

நான்கு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வாசித்தார்.

1971ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொதுநல அமைப்பான உலக பொருளாதார அவை, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இதனை, சுவிட்சர்லாந்து நாட்டு பொருளாதாப் பேராசிரியர் Klaus Schwab என்பவர் உருவாக்கினார். இந்த அவை, சமூகத்தில் நல்லதொரு மாற்றங்களை ஊக்குவிக்கக்கூடிய மனிதர்களை ஒன்றிணைக்கின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.