2018-01-23 15:18:00

சிலே,பெரு திருத்தூதுப்பயணம் பற்றி செய்தியாளர்களுடன்...


சன.23,2018. சிலே பெரு ஆகிய நாடுகளில் மக்கள் காட்டிய பாசத்தில் நெகிழ்ந்துபோனேன் மற்றும், அம்மக்களின் விசுவாசம், வியப்பூட்டியது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டிலிருந்து இத்தாலிக்குத் திரும்பிய விமானப் பயணத்தில், தன்னோடு பயணம் மேற்கொண்ட பன்னாட்டு செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

சிலே பெரு ஆகிய இரு தென் அமெரிக்க நாடுகளுக்கு ஒரு வாரத் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்து, உரோம் நகருக்குத் திரும்பிய 13 மணி 30 நிமிடங்கள் கொண்ட விமானப் பயணத்தில், விமானத்தில் திருத்தந்தை ஆசீர்வதித்த திருமணம், பாலியல்முறையில் குற்றம் சாட்டப்பட்ட ஆயர் பற்றிக் கூறியது, சில தென் அமெரிக்க அரசுகளின் தாராளமயமாக்கல் கொள்கைகள் உட்பட, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறு மாலையில் பெரு நாட்டின் லீமா நகரின் Las Palmas இராணுவ விமானத்தளத்தில் 13 இலட்சத்திற்கு மேற்பட்ட விசுவாசிகள் திருப்பலியில் கலந்துகொண்டது போன்ற, இந்த திருத்தூதுப்பயணத்தின் பல நிகழ்வுகள், உள்ளத்தை நெகிழ வைத்தன என்றும், இதேபோல் சிலே நாட்டு மக்கள் காட்டிய பாசமும் எனது மனதை மிகவும் தொட்டது என்றும் திருத்தந்தை கூறினார்.

சிலே நாட்டில், சந்தியாகோ நகரில் பெண் கைதிகள் சிறையில் அந்தப் பெண்களைப் பார்த்தது, அக்கைதிகள் தங்கள் வாழ்வை மாற்றி, நற்செய்தியின் வல்லமையோடு சமூகத்திற்குத் திரும்புவதற்கு வெளிப்படுத்திய ஆர்வம், பெரு நாட்டின் அமேசான் பருவமழைக்காடுகள் பகுதியில், Puerto Maldonadoவில் பூர்வீக இன மக்களைச் சந்தித்தது, குட்டி இளவரசன் இல்லத்தில் இளம் சிறுமிகளையும் சிறாரையும் சந்தித்தது போன்றவை என் இதயத்தை மிகவும் தொட்டன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாலியல் விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிலே நாட்டு ஆயர் ஹூவான் பாரோஸ் அவர்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, தான் கூறியவைகளில் சில, திருஅவையில் சில அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் புண்படுத்தியுள்ளது, இதை உணராமல் நான் அவர்களைப் புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்புக் கேட்கிறேன், அவர்களைப் புண்படுத்த வேண்டுமென்பது எனது எண்ணமல்ல என்பதை வலியுறுத்திக் கூறினார்.

தான் பயன்படுத்திய வார்த்தைகள், எதிர்பாராதவை, எனினும், என்னிடம் சான்றுகள் எதுவும் இல்லாமல், ஆயர் பாரோஸ் அவர்களுக்கு எதிராக நான் கண்டனம் தெரிவிக்க இயலாது என்றுரைத்த திருத்தந்தை, எதிர்பாராத விதமாக, சிலே நாட்டில், விமானப்பயணத்தின்போது ஆசீர்வதித்த விமானப்பணியாளர்களின் திருமணம் குறித்தும் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

இன்று ஆற்ற முடிந்ததை, நாளைக்குத் தள்ளிப்போடாமல் இன்றே ஏன் செய்யக் கூடாது என்றும், காத்திருத்தல், மேலும் 8 முதல் 10 ஆண்டுகள்வரைகூட நீடிக்கலாம் என்று, விமானப்பணியாளர்களின் திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 15ம் தேதி இரவு 8 மணியளவில் சிலே நாட்டின் சந்தியாகோ நகர் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 21, இஞ்ஞாயிறு மாலையில் பெரு நாட்டில்  திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்து, இத்திங்கள் பிற்பகல் 2.15 மணிக்கு உரோம் வந்து சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.