2018-01-23 14:51:00

இமயமாகும் இளமை - சந்தடிகளால் சந்தர்ப்பங்களை இழக்க நேரிடும்!


பல ஆண்டுகளுக்குமுன், இலண்டன் மாநகரில், ஒரு கப்பல் நிறுவனம், நேர்காணல் ஒன்றை நடத்தியது. கடல் பயணத்தின்போது, அவசரச் செய்திகளைப் பெறுவதிலும், அனுப்புவதிலும் கவனமாகப் பணியாற்றக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்வதற்காக அந்த நேர்காணல் நடத்தப்பட்டது.

நேர்காணலில் பங்கேற்க வந்திருந்த பல இளையோர், ஓர் அரங்கத்தில் கூடியிருந்தனர். அக்காலத்தில், தந்திச் செய்திகளை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒலிவடிவங்கள், அந்த அரங்கத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி வழியே, அவ்வப்போது வந்தவண்ணம் இருந்தன. ஆனால், அவ்வறையில் கூடியிருந்த இளையோர் பேசி, சிரித்துக்கொண்டிருந்ததால், அந்த ஒலியை யாரும் கேட்க இயலாமல் போனது.

அவ்வேளையில், அந்த அரங்கத்திற்குள் நுழைந்த ஓர் இளையவர், சப்தமிட்டுக்கொண்டிருந்த இளையோரைவிட்டு விலகி, அமைதியாக ஓர் ஓரத்தில் அமர்ந்தார். சில நொடிகளில், அவர் திடீரென எழுந்து, அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தார். சில நிமிடங்களில் வெளியே வந்த அவர், தனக்கு வேலை கிடைத்துவிட்ட மகிழ்வை மற்றவர்களிடம் கூறினார்.

ஏனைய இளையோர், அவரிடம், "நீ எங்களுக்குப் பின் இங்கு வந்தாய். எங்களுக்கு முன் உள்ளே செல்வதற்கு உன்னை யார் அழைத்தார்கள்?" என்று கேட்டனர். அவர் அவர்களிடம், "இந்த அரங்கத்தில் உள்ள ஒலிபெருக்கி வழியே, உள்ளே வரும்படி அழைப்பு ஒன்று, தந்தி ஒலிவடிவத்தில் வந்தவண்ணம் இருந்தது. ஆனால், அந்த அழைப்பைக் கேட்க முடியாதவாறு, நீங்கள் சப்தமாகப் பேசிக்கொண்டிருந்தீர்கள். நான் அந்த ஒலிவடிவத்தைக் கேட்டேன், உள்ளேச் சென்றேன், வேலை கிடைத்தது" என்று சொல்லிவிட்டு, புன்னகையோடு அங்கிருந்து சென்றார்.

உலகின் சந்தடிகளில் தங்களையே இழந்துவிடும் இளையோர், சந்தர்ப்பங்களையும் இழக்க நேரிடும்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.