2018-01-22 15:20:00

லீமா பேராலயத்தில் திருத்தந்தை செபம், ஆயர்கள் சந்திப்பு


சன.22,2018. லீமா பேராலயத்தில், புனிதர்கள் திருப்பொருள்கள் முன்னிலையில் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லீமா உயர்மறைமாவட்டம், Mogrovejoவின் புனித Turibius அவர்களின் திருத்தூதுப் பணிகளால் சிறப்பாக உயர்ந்துள்ளது. அதேநேரம், லீமா நகரின் புனித ரோஸ், புனித மார்ட்டின் தெ போரஸ் ஆகியோரின் செபம், தவம், பிறரன்புப் பணிகளாலும், புனித Francisco Solano அவர்களின் திருத்தூதுப்பணி ஆர்வத்தாலும், புனித Juan Macías அவர்களின் பணிவான சேவையாலும் வளர்ந்துள்ளது என்று செபித்தார். மேலும், லீமாவில், திருஅவைக்கு இறைவன் வழங்கியுள்ள கொடைகளுக்காக, சிறப்பாக, நம் மண்ணை வளம்பெறச் செய்துள்ள புனிதம் எனும் கொடைக்காக நன்றி என்று சொன்னார் திருத்தந்தை. பின்னர் எல்லாரையும் ஆசீர்வதித்து, லீமா நகர் பேராயர் இல்லத்தில் பெரு நாட்டு ஆயர்களைச் சந்திக்கச் சென்றார். பெரு நாட்டின் 47 பேராயர்கள் மற்றும் ஆயர்களின் கேள்விகளுக்குப் பதில்சொல்லி, ஓர் உரையாடல் போன்று இச்சந்திப்பு நடைபெற்றது. ஆயர்களிடம் புனித Turibius பற்றி அதிகம் பேசினார் திருத்தந்தை. இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 16ம் நூற்றாண்டு புனிதரான Mogrovejoவின் Turibius அவர்கள், லீமா பேராயராக 22 ஆண்டுகள் பணியாற்றி, பெரு நாட்டின் பூர்வீக இன மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்ட தன்னை அர்ப்பணித்தவர். 1726ம் ஆண்டில் புனிதராக அறிவிக்கப்பட்ட இப்புனிதர், இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையின் பாதுகாவலராவார். மக்களின் குரல்களில் நற்செய்தியை அறிவியுங்கள், ஒற்றுமை மற்றும், நம்பிக்கையை ஏற்படுத்தப் பணியாற்றுங்கள் என்று ஆயர்களிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களை ஒவ்வொருவராக வாழ்த்தினார். அதன்பின்னர், பகல் 12 மணிக்கு அர்மாஸ் வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இளையோருக்கு மூவேளை செப உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.