2018-01-22 12:37:00

பெரு நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


சன.22,2018. என் சகோதர ஆயர்களே, உங்கள் நடுவே நான் செலவிட்ட இந்நாட்கள், நிறைவு தரும் நாட்களாக அமைந்தன. இறைமக்களின் நம்பிக்கையை நேரடியாகத் தொட்டுணர எனக்களித்த வாய்ப்பிற்கு நன்றி.

இந்தப் பயணத்தின் விருதுவாக்கு, ஒன்றிப்பு, நம்பிக்கை ஆகியவற்றைப்பற்றி கூறுகின்றது. இந்நாட்டில் பணியாற்றிய மோக்ரோவெஹோவின் புனித துரிபியுஸ் (Saint Turibius of Mogrovejo) அவர்களை எண்ணிப்பார்க்க வைக்கின்றது. இலத்தீன் அமெரிக்க ஆயர்களின் பாதுகாவலரான இப்புனிதரை, 'திருஅவை ஒன்றிப்பை கட்டியவர்' என்று, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

'புதிய மோசே' என்றழைக்கப்படும் புனித துரிபியுஸ்ஸைச் சித்திரிக்கும் ஓர் ஓவியம் வத்திக்கானில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த ஓவியத்தில், இப்புனிதர், செங்கடலைப் போன்ற ஒரு நீர்த்திரளைக் கடந்து, மறுகரையில் உள்ள மண்ணின் மைந்தர்களைக் காணச் செல்வது போலவும், அப்புனிதரைப் பின்தொடர்ந்து, விசுவாசிகள் செல்வதுபோலவும் அந்த ஓவியம் அமைந்துள்ளது. அந்த ஓவியத்தின் அடிப்படையில், "மறுக்கரைக்குச் செல்ல விழைந்த புனித துரிபியுஸ்" என்ற கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

இறைவனின் அழைப்பை உணர்ந்த நேரம் முதல், புனித துரிபியுஸ், பழக்கமான, சுகமான தன் சூழல்களை விடுத்து, பழக்கமில்லாத, சவால்கள் நிறைந்த புதிய உலகிற்குள் நுழைந்தார். 'நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி' (எபிரேயர் 11:1) என்ற அடிப்படையில், அவர் வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி பயணமானார்.

மறுகரைக்குச் செல்வதற்காக, அவர் தன் ஆயர் இல்லத்தின் சுகங்களைத் துறக்க வேண்டியிருந்தது. அவர் ஆயராகப் பணியாற்றிய 22 ஆண்டுகளில், 18 ஆண்டுகள், ஆயர் இல்லத்தைவிட்டு, தனக்குப் பழக்கமானப் பகுதிகளைவிட்டு, வெளியே வாழ்ந்து வந்தார். நற்செய்தியின் மகிழ்வு, அனைவருக்கும் உரித்தானது என்பதை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார்.

மறுகரைக்குச் செல்வது எனில், உடல் அளவில் மட்டுமல்ல, கலாச்சார அளவிலும் என்பதை, புனித துரிபியுஸ் உணர்ந்திருந்தார். வேற்று கலாச்சார மக்களுடன் சென்று தங்குவது மட்டும் போதாது; அவர்களுடைய வாழ்வில் வேரூன்றவும் வேண்டும் என்பதை புரிந்துகொண்டார். அவர்களது மொழி, வாழ்வுக் கொள்கைகள் அனைத்தையும் அறிந்து, கலாச்சார வழியில் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆற்றினார்.

மறுகரைக்குச் செல்வது எனில், பிறரன்பு பணியென்பதை அவர் அறிந்திருந்தார். பிறரன்பு இன்றி, நற்செய்தி அறிவிப்புப் பணி இல்லை என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தார். பழங்குடியினரை வதைத்து வந்த Cajatombo பகுதியின் தலைவரை திருஅவையிலிருந்து விலக்கிவைக்க, புனித துரிபியுஸ் தயங்கவில்லை. இதனால், அவர் பலரது பகைமைக்கு உள்ளாக வேண்டியிருந்தது. இருப்பினும், மனம் தளராமல் அம்மக்களுக்காகப் போராடினார். பிறரன்பு, எப்போதும் நீதியுடன் இணையவேண்டும் என்பதை அவர் சொல்லித்தந்துள்ளார்.

அருள்பணியாளர் உருவாக்கத்தில், மறுகரைக்குச் செல்ல விழைந்தார், புனித துரிபியுஸ். மண்ணின் மைந்தர்களை அருள்பணிக்கெனத் தயாரிக்க, குருத்துவ இல்லங்களை நிறுவினார். அருள்பணியாளர்கள், தங்கள் பிறந்த இனத்தால் அல்ல, புனிதத்தால் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்ததால், Mestizos பழங்குடி இனத்தவரை அருள்பணியாளராக திருப்பொழிவு செய்தார். அதனால், பல எதிர்ப்புக்களையும் சந்தித்தார். அருள்பணியாளர்கள், கோவில் சொத்துக்களைக் காக்கும் கடைக்காரர்களாக இல்லாமல், மேய்ப்பர்களாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ஒன்றிப்பில் மறுகரையை அடையவிரும்பினார், புனித துரிபியுஸ். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றிப்பை உருவாக்க உதவிய மூன்றாவது லீமா சங்கம், புனிதரின் அயரா உழைப்பால் விளைந்தது என்பதை, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் குறிப்பிட்டுள்ளார். மோதல்கள், இறுக்கமானச் சூழல்கள் இவற்றின் நடுவே, இந்த ஒன்றிப்பு உருவானது.

அன்பு சகோதர ஆயர்களே, பிரிவுகள் என்ற சிறைகளுக்குள் வாழாமல், ஒன்றிப்பிற்காக அயராது உழையுங்கள். கிறிஸ்தவர்களிடம் காணப்பட்ட ஒற்றுமையே, முதல் திருஅவையை உலக மக்களுக்கு முதலில் அடையாளப்படுத்தியது என்பதை மறவாதீர்கள்.

இறுதியாக, புனித துரிபியுஸ், தன் வாழ்வின் இறுதியில், மறுகரையை அடைந்தார். தன் மக்களால் சூழப்பட்டிருந்த வேளையில், அந்த மேய்ப்பர், தன் இறுதிக்கரையை அடைந்தார். மக்களால் சூழப்பட்டிருக்கும் வேளையில், நாம் இறையடி சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இந்த வரத்திற்காக நாம் செபிப்போம். எனக்காக செபிக்க மறவாதீர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.