2018-01-22 15:13:00

பெரு நாட்டின் ஆழ்நிலை தியான சபையினர் சந்திப்பு


சன.22,2018. சனவரி 21, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 8.50 மணிக்கு, லீமா நகரிலுள்ள புதுமைகளின் ஆண்டவர் திருத்தலத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். காலணி அணியாத கார்மேல் நசரேன் ஆழ்நிலை தியான சபையினர் பராமரிக்கும் இத்திருத்தலம், லீமா வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதும், பெரு நாட்டு கத்தோலிக்க சமுதாயம் விரும்பிச் சென்று செபிக்கும் புனித இடமும் ஆகும். இங்கு 17ம் நூற்றாண்டில் வரையப்பட்ட, கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவது போன்ற சுவரோவியம் உள்ளது. 1655ம் ஆண்டில் இடம்பெற்ற கடும் நிலநடுக்கத்திலும், அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிலநடுக்கங்களிலும் இந்த ஓவியம் மட்டும் சேதமடையாமல் இருந்தது. அதன்பின்னர், இந்த ஓவியம், ‘புதுமைகளின் ஆண்டவர்’ என அழைக்கப்படுகிறது. புதுமைகளின் ஆண்டவரிடம் செபிக்கும் மக்களுக்கு, பல்வேறு புதுமைகளும் நடப்பதாகச் சொல்லப்படுகின்றது. இந்த திருத்தலத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறிது நேரம் அமைதியாகச் செபித்தார். பின்னர், பெரு நாட்டின் ஏறத்தாழ 500 ஆழ்நிலை தியான சபையினருடன் சேர்ந்து திருப்புகழ்மாலை செபம் சொல்லி, மறையுரையும் ஆற்றினார் திருத்தந்தை. சகோதரிகளே, நீங்கள் திருஅவைக்குத் தேவை. கலங்கரை விளக்காக இருங்கள், எனக்காகச் செபிக்க மறவாதீர்கள் என்று, ஆழ்நிலை தியான சபையினரிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இச்சபைகளின் ஆறு தலைமைச் சகோதரிகளைத் தனித்தனியே வாழ்த்தினார். இச்சந்திப்பை நிறைவு செய்து, அங்கிருந்து 450 மீட்டர் தூரத்திலுள்ள திருத்தூதர் புனித யோவான் மற்றும் நற்செய்தி அன்னை மரியா பேராலயத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். லீமா நகரின் தாய் ஆலயம் என நோக்கப்படும் இப்பேராலயம், 1535ம் ஆண்டில், இஸ்பானிய நாடுகாண் பயணி Francisco Pizarro அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பேராலயத்திலுள்ள, நற்செய்தி அன்னை மரியா திருவுருவத்தின் கையிலுள்ள தங்கரோஜா, 1988ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், பெரு நாட்டிற்கு மேற்கொண்ட இரண்டாவது திருத்தூதுப்பயணத்தின்போது அர்ப்பணித்ததாகும். இப்பேராலயத்தில், ஏறத்தாழ 2,500 அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், திருஅவை மற்றும் மேய்ப்புப்பணி இயக்கங்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். இப்பேராலயத்திலுள்ள, பெரு நாட்டின் புனிதர்கள் பீடத்திற்கு, லீமா பேராயருடன் சென்ற திருத்தந்தை சிறிது நேரம் செபித்தார். பின்னர் புனிதர்கள் திருப்பொருள்கள் விசுவாசிகள் மத்தியில் கொண்டுவரப்பட்டன. பின்னர் திருத்தந்தை, எல்லாரோடும் சேர்ந்து செபித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.