2018-01-22 16:34:00

Las Palmas விமானத்தளத்தில் திருத்தந்தை திருப்பலி


சன.22,2018. இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை 3.40 மணிக்கு, லீமா நகரின் Las Palmas இராணுவ விமானத்தளம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இராணுவ அதிபர் வரவேற்றார். அந்த தளத்தில் திருப்பலிக்காகக் காத்திருந்த ஏறத்தாழ 13 இலட்சம் விசுவாசிகள் மத்தியில், திறந்த காரில் வந்து திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. திருப்பலி மேடையில், புதுமைகளின் ஆண்டவர் திருவுருவம் வைக்கப்பட்டிருந்தது. இயேசுவைப் பின்பற்றுங்கள், 21ம் நூற்றாண்டின் புனிதர்களாக வாழ்வதற்கு அஞ்சாதீர்கள் என்று மறையுரையில், பெரு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இத்திருப்பலியின் இறுதியில், இத்திருத்தூதுப்பயணத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பெரு நாட்டு அரசுத்தலைவர் Pedro Pablo Kuczynski, லீமா பேராயர் கர்தினால் ஹூவான் லூயிஸ் சிப்ரியான், அரசு மற்றும் திருஅவை அதிகாரிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள், ஏராளமான தன்னார்வலர்கள் ஆகிய எல்லாருக்கும் நன்றி. பெரு நாட்டை நம்பிக்கையின் பூமியாகச் சொல்லி, உங்கள் மத்தியில் எனது திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கினேன். ஏனெனில் இப்பூமி பல்வேறு வளமையான உயிரினங்களையும், பல்வேறு கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் இளையோர், வருங்காலம் அல்ல, பெரு நாட்டின் இக்காலத்தவர், பெரு நாட்டு மக்களே, உங்கள் நம்பிக்கையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஒன்றிப்பின் வழியாகவே உங்கள் நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும். நீங்கள் என் இதயத்தில் உள்ளீர்கள். எனக்காகச் செபிக்க மறவாதீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று சொல்லி, அனைவரையும் ஆசீர்வதித்து இத்திருப்பலியை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில் கலந்துகொண்ட பெரு நாட்டு அரசுத்தலைவர் Pedro Pablo Kuczynski, கிறிஸ்தவ சபைகளின் ஏழு பிரதிநிதிகள் ஆகியோரை வாழ்த்திய திருத்தந்தை அவ்விடத்திலிருந்து லீமா பன்னாட்டு விமான நிலையம் சென்றார். உங்கள் நம்பிக்கையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று பெரு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்து, இந்திய இலங்கை நேரம் இத்திங்கள் காலை 5.40 மணிக்கு, LATAM B 767 சிறப்பு விமானத்தில் உரோம் நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவடைந்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.