2018-01-20 15:28:00

பெரு நாட்டின் அமேசான் பகுதியில் திருத்தந்தை பிரான்சிஸ்


சன.20,2018. தென் அமெரிக்காவில் எழுபது இலட்சம் சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அமேசான் ஆற்றுப்படுகையில், 55 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பகுதி பருவமழைக் காடுகளாகும். நாம் வாழ்கின்ற இந்த பூமிக்கோளத்தின் நுரையீரல் எனப்படும் அமேசான் பருவமழைக்காடுகள், உலகின் மிகப்பெரிய பருவமழைக் காடுகள் ஆகும். மேலும், இது பல்வகை உயிரினங்களையும் அதிகமாகக் கொண்டுள்ள பகுதியாகும். இக்காடுகளின் அறுபது விழுக்காட்டுப் பகுதி, பிரேசில் நாட்டில் உள்ளது. 13 விழுக்காட்டுப் பகுதி பெரு நாட்டில் உள்ளது. பெரு நாட்டிலுள்ள அமேசான் காடுகள், அந்நாட்டின் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான நிலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. இப்பகுதியில், ஏறத்தாழ 350 பூர்வீக இனக் குழுக்களைச் சார்ந்த, 3 இலட்சத்து 32 ஆயிரம் பூர்வீக இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்குழுக்களில் சில, தாங்களாகவே, ஏனைய மக்களிடமிருந்து பிரிந்து தனியே வாழ்கின்றனர். அந்நாட்டில் பேசப்படும் 42 மொழிகளில் அதிகமானவை, அமேசான் பகுதியில் பேசப்படுகின்றன. அமேசான் பகுதியில் வாழ்கின்ற இந்த மக்களின் வாழ்வும், வாழ்வாதாரங்களும், நிலங்களும், கலாச்சாரங்களும், வளங்களும், பன்னாட்டு நிறுவனங்களால் பல்வேறு வழிகளில் சுரண்டப்பட்டு வருவதால், இம்மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்க்கொண்டு வருகின்றனர். வறியோர், சமூகத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டோர் போன்றோருக்கு தனது இதயத்தில் தனியிடம் கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரு நாட்டில், தனது திருத்தூதுப் பயணத்தின் முதல் நிகழ்வாக, அமேசான் பகுதிக்குச் சென்று அம்மக்களைச் சந்தித்து அம்மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.

அமேசான் பகுதியின் நுழைவாயில் நகரமான Puerto Maldonado, பெரு நாட்டின் தென்கிழக்கில், Madre de Dios அதாவது இறைவனின் அன்னை எனப் பொருள்படும் மாநிலத்தில் அமைந்துள்ளது. Madre de Dios நதியும், Tambopata நதியும் சந்திக்கும் இடத்திலுள்ள இந்நகரம் அமைந்துள்ள பகுதி, 1567ம் ஆண்டில் இஸ்பானிய நாடுகாண் பயணி ஹூவான் அல்வாரெஸ் மால்தொனாதோ என்பவரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில் தங்கத்தைத் தேடிச்சென்ற இவர் தலைமையிலான குழுவினருள் 200க்கும் மேற்பட்டோர், பூர்வீக இனத்தவரின் தாக்குதல்கள் மற்றும் நோய்களால் இறந்தனர். இதனால் இப்பகுதியைவிட்டு இவர் வெளியேறினார். பின்னர் 1902ம் ஆண்டில் மற்றுமோர் இஸ்பானிய நாடுகாண் பயணி Faustino Maldonado என்பவர் இப்பகுதிக்குச் சென்றார். அதன்பின்னர் Puerto Maldonado நகரம் முன்னேறத் தொடங்கியது. Puerto Maldonado நகரின் Padre Jose Aldamiz விமான நிலையம், அப்பகுதிக்கு முதன்முதலாக விமான சேவையைத் தொடங்கிய தொமினிக்கன் சபை அருள்பணியாளர் Jose Aldamiz அவர்கள் பெயரால் அழைக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.