2018-01-20 15:51:00

திருத்தந்தை : பெரு நாட்டு அரசு அதிகாரிகளுக்கு வழங்கிய உரை


சன.20,2018. அரசுத்தலைவரே, அரசுத்தூதர்களே, சமூகப் பிரதிநிதிகளே, அதிகாரிகளே, அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பெரு நாட்டில் பயணம் மேற்கொள்ள அரசுத்தலைவர் விடுத்த அழைப்புக்கும், தற்போது அவர் வழங்கிய வரவேற்பு வார்த்தைகளுக்கும் என் நன்றியைக் கூறுகிறேன்.

'நம்பிக்கையால் ஒன்றிணைவது' என்ற இத்திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கை நினைவுகூர்கிறேன். இந்த நாட்டை பார்க்கும்போதே நம்பிக்கை பிறக்கிறது.

அமேசான் இயற்கை வளங்களின் ஒரு பகுதி, உங்கள் நாட்டில் உள்ளது. மிகப்பெரும் பருவ மழைக்காட்டையும், பரந்து விரிந்த ஆறுகளையும், பல்வேறு விலங்கினங்களையும் கொண்டுள்ள இப்பகுதி, உலகின் நிரையீரல் என அழைக்கப்படுகிறது. இந்த அமேசான் பகுதிக்கு இன்று காலையில் சென்றேன்.

பல்வேறு கலாச்சார வளங்களையும் கொண்டுள்ளீர்கள். இன்முக வரவேற்பு, பிறரை மதித்தல், அன்னை பூமியை மதித்து நன்றியுரைத்தல் என்ற உங்கள் முன்னோர்களின் மதிப்பீடுகள் உங்களிடம் உள்ளன. மேலும், உங்களிடம், உயிரூட்டமுள்ள கொடைகளாக, இளையோர் உள்ளனர். உங்களின் உன்னத தொன்மை கலாச்சாரங்களும், இளையோரின் புதிய கண்ணோட்டங்களும் சங்கமிக்க வேண்டும்.

இந்த மண்ணில், நம்பிக்கை என்பது, புனிதத்துவத்தின் முகத்தைக் கொண்டுள்ளது. இங்கு பல புனிதர்கள் உருவாகியுள்ளனர். உதாரணத்திற்கு, புனித மார்ட்டின் டி போரஸ் அவர்களைக் குறிப்பிடலாம்.

நமிபிக்கைகள் பலமாக இருந்தாலும், அதன் மீதும் நிழல் படர்கிறது, அச்சுறுத்தல் சூழ்கிறது. இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளின் அழிவால், பல்வேறு உயிரினங்களின் அழிவுக்கு வித்திடப்படுகின்றது, சுற்றுச்சூழல் பாதிப்பும் உருவாகின்றது.

இயற்கைவள பாதுகாப்பு பொருத்தவற்றில், அந்தந்த பகுதி மக்களின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இயற்கை அழிவும், மக்களின் ஒழுக்க ரீதி சரிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளது. உதாரணத்திற்கு, கறுப்புச் சந்தையில் திகழும் சுரங்கத் தொழில். இது மக்களின் வாழ்வையும், காடுகளையும், ஆறுகளையும் அழித்து வருகிறது.

இது தொடர்பான சட்ட விரோத நிறுவனங்கள், மனித வியாபாரத்தில் ஈடுபடுவது, ஒழுங்கு முறையற்ற பணியமர்த்தல்கள், குற்றங்கள் போன்றவை பெருகி, மனித மாண்பையும், ஒரு நாட்டின் மாண்பையும் நசுக்குகின்றன.

நம்பிக்கையை ஒன்றிணைந்து பாதுகாப்பது என்பது, மற்றவர்கள் மீது அக்கறையுள்ளவர்களாகவும், சுற்றுச்சூழல் அழிவு குறித்து கவலை கொண்டவர்களாகவும், இலஞ்ச ஊழலை ஒதுக்குபவர்களாகவும் இருக்க அழைப்பு விடுக்கிறது. 'இத்தகைய நிலைகள் இல்லாமை' என்பது, அன்னை பூமியையும், இலத்தீன் அமெரிக்காவின் மக்களையும், ஏழைகளையும் பெருமளவில் பாதித்துள்ளது. அனைவரின் போராட்டம் இங்கு தேவைப்படுகிறது. உயர் அதிகாரிகளின் வெளிப்படையான நடவடிக்கைகள் அவசியமாகிறது. இலஞ்ச ஊழல் என்பது, அகற்றப்படலாம், அனைவரின் அர்ப்பணத்துடன் கூடிய ஒத்துழைப்போடு.

பெரு நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும், இது என் நாடு, இங்கிருப்போர் என் சகோதரர்கள் என்பதை உறுதியாக மனதில் இருத்தி செயல்பட வேண்டும். இதன் வழியாக, பெரு நாட்டு வாழ்வு குறித்த வாக்குறுதிகள் வெற்றி பெறும்.

இந்நாடு, நம்பிக்கையின் பூமியாக தொடர்ந்து செயல்பட, கத்தோலிக்க திரு அவையின் அர்ப்பணத்திற்கு உறுதி கூறுகிறேன். லீமாவின் புனித ரோஸ், உங்கள் ஒவ்வொருவருக்காகவும், இந்த நாட்டிற்காகவும் பரிந்துரைப்பாராக. மீண்டும் நன்றி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.