சன.20,2018. அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, அன்பு குழந்தைகளே, அப்ரோனியா (Apronia) அறக்கட்டளை நடத்தும் பல இல்லங்களிலிருந்து 'குட்டி இளவரசன் இல்ல'த்தில் கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. அண்மையில் நாம் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடினோம். குழந்தை இயேசுவின் உருவம், நம் உள்ளங்களைத் தொட்டது. குழந்தைகளாகிய நீங்கள், எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரியதொரு கொடை; போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய கொடை.
வயதில் வளர்ந்துவிட்ட நாங்கள், சிலவேளைகளில் உங்களை சரிவர பாதுகாக்காமல் போனதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள். நீங்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது, மற்ற குழந்தைகளை, குறிப்பாக, துன்புறும் குழந்தைகளை மறந்துபோகாதீர்கள்.
இந்த இல்லத்தில் வளர்க்கப்பட்ட இளையோரே, நீங்கள் இவ்வில்லத்தில் உள்ள குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி, இங்கு பணியாற்றுவது அழகான அம்சம். இக்குழந்தைகளுக்கு விண்மீன்களாகத் திகழுங்கள். குட்டி இளவரசன் சொல்வதுபோல், நீங்கள் அனைவரும் "இரவு வானத்தை ஒளிர்விக்கும் விண்மீன்கள்" (cf. Antoine de Saint-Exupéry, XXIV; XXVI)
உங்களில் பலர், பழங்குடி இனத்திலிருந்து வந்தவர்கள். உங்கள் பகுதியில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைக் கண்டிருக்கிறீர்கள். இந்த அழிவுகளுக்கு உங்களையே உட்படுத்திக் கொள்ளாதீர்கள்! உங்கள் பாரம்பரியத்தையும், உங்கள் முன்னோரின் கனவுகளையும் கைவிடாதீர்கள்! இவ்வுலகிற்கு நீங்கள் தேவை. மற்றவர்களைப்போல் வேடமணியாமல், உங்கள் சுயமான உருவத்துடன் வாழ முற்படுங்கள்!
உங்கள் பாரம்பரிய வேர்களில் ஊன்றி நிற்கும் அதேவேளை, புதியனவற்றைக் காண்பதற்கு, கண்களைத் திறந்து வையுங்கள். மற்றொருவரின் பிம்பமாக இல்லாமல், நீங்கள், நீங்களாக இருப்பதே சிறந்தது. முன்னேற்றம் என்ற பாதையில், அனைத்தையும் அழிக்கத் தேவையில்லை என்பதை, இவ்வுலகிற்கு உணர்த்துங்கள்!
அப்ரோனியா அறக்கட்டளையின் அமைப்பாளர், அருள்பணி சேவியர் அவர்களுக்கு நன்றி. எவ்வளவோ துன்பங்களைத் தாங்கி அவர் இந்த அறக்கட்டளையை உருவாக்கியிருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றும் அனைவருக்கும் நன்றி. அமேசான் மக்களின் தனித்துவத்தைக் காப்பாற்ற நீங்கள் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றி.
நாம் இப்போது, கண்களை மூடி, இறை ஆசீருக்காகச் செபிப்போம். ”ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள்மேல் ஒளிரச்செய்து உங்கள்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள் பக்கம் திருப்பி உங்களுக்கு அமைதி அருள்வாராக!" (எண்ணிக்கை 6:24-26)
இரு விடயங்களைக் கூற விழைகிறேன். எனக்காக செபிக்க மறவாதீர்கள்! நீங்கள் அனைவரும் இரவு வானத்தை ஒளிர்விக்கும் விண்மீன்கள்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |