2018-01-20 16:10:00

குட்டி இளவரசன் இல்லச் சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்


சன.20,2018. பெரு நாட்டின் அமேசான் பகுதியின் Puerto Maldonado நகர் Coliseo Madre de Dios விளையாட்டு அரங்கில், பூர்வீக இன மக்கள் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பை நிறைவுசெய்து, மீண்டும் திறந்த காரில், Puerto Maldonado நகரின் Jorge Basadre கல்வி நிறுவனம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இங்கு திருத்தந்தை நுழைந்தவுடனே மாணவர்கள் எழுப்பிய மகிழ்ச்சி ஆரவாரம் வானைப் பிளந்தது. இந்நிகழ்வில் வேதியர் ஒருவர் முதலில் திருத்தந்தையை வரவேற்று, சாட்சி சொன்னார். அதன்பின்னர், திருத்தந்தையும் தனது உரையைத் தொடங்கினார். இவ்வுரைக்குப் பின்னர், இவர்களை ஆசீர்வதித்து, அவ்விடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, Hogar El Principito அதாவது குட்டி இளவரசனின் இல்லம் எனப்படும் கைவிடப்பட்ட சிறார் இல்லத்திற்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். Puerto Maldonadoவில் கைவிடப்பட்ட மற்றும், தவறாகப் பயன்படுத்தப்பட்ட சிறாருக்கென, 1996ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இல்லத்தில், ஏறத்தாழ நாற்பது சிறார் மற்றும் இளையோர் பராமரிக்கப்படுகின்றனர். இச்சிறார், இனிய பாடலால் திருத்தந்தையை வரவேற்றனர். இப்பாடலில் மகிழ்ந்த திருத்தந்தை, இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறாருக்கும், இளையோருக்கும் ஊக்கமூட்டும் உரையை வழங்கினார். இந்த உலகிற்கு நீங்கள் தேவை, கல்வியில் கவனம் செலுத்துங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து Apaktone மேய்ப்புப்பணி மையம் சென்று, அமேசான் மக்கள் பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்தினார். சனவரி 19, இவ்வெள்ளி பிற்பகல் 2.20 மணிக்கு Puerto Maldonado நகரின், Padre Jose Aldamiz விமான நிலையம் சென்று, லீமா நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.