2018-01-20 15:14:00

Jorge Basadre நிறுவனத்தில் திருத்தந்தையின் உரை


சன.20,2018. அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, பெரு, ஆந்தெஸ், மற்றும் பிற நாடுகளில் அமேசான் பகுதிகளில் வாழ்வோர் இங்கு இணைந்து வந்திருப்பதைக் காண்கிறேன். எல்லைகளற்ற திருஅவை என்ற உருவம், எவ்வளவு அழகானது! சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்கும் இத்தகையத் தருணங்கள் நமக்கு அதிகம் தேவை.

"மறக்கப்பட்ட, காயப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட எங்கள் பூமியைக் காண வந்துள்ளீர்கள்; ஆனால், நாங்கள் வாழ்வது அடையாளமற்ற பூமி அல்ல" என்று அர்த்தூரோவும் மார்கரீத்தாவும் கூறியச் சொற்களுக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் வாழ்வது, முகமற்ற, அடையாளமற்ற நிலம் அல்ல.

இந்தப் பகுதிக்கு, Madre de Dios, அதாவது, 'இறைவனின் தாய்' என்ற அழகிய பெயர் உண்டு. மரியாவும், 'அடையாளமற்ற பூமி'யாகப் பலராலும் கருதப்பட்ட ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்தவர். மரியாவை, ஓர் எடுத்துக்காட்டாக மட்டுமல்ல, ஒரு தாயாகவும் நாம் காணலாம். எங்கெங்கு தாய் இருக்கிறாரோ, அங்கு, உறவு, குடும்பம் என்ற உணர்வுகளும் இருக்கும்.

இந்தப் பூமி, அனாதையாக விடப்பட்ட பூமி அல்ல; இதற்கு தாயொருவர் உள்ளார். இறைவனின் தாய் என்றழைக்கப்படும் இப்பகுதியை வர்த்தகப் பூமியாக மாற்றும் முயற்சியில், இதனை, வாழ்வற்ற, வறண்டதொரு நிலமாக மாற்றும் முயற்சிகள் நடப்பது, வேதனை தருகிறது.

நான் பல தருணங்களில் தூக்கியெறியும் கலாச்சாரத்தைப் பற்றி பேசியிருக்கிறேன். உயிர்களைப் பேணும் தாய்மை உணர்வின்றி, பொருள்களை விழுங்குவதையே குறியாகக் கொண்டுள்ள ஒரு கலாச்சாரம் அது. இந்த பூமியையும், அதன் இயற்கை வளங்கள் அனைத்தையும் விழுங்குவதும், தூக்கியெறிவதும் இக்கலாச்சாரத்தின் போக்கு. அதேவண்ணம், மனிதரையும் இது தூக்கியெறிகிறது. 'பயனற்றது' என்று முத்திரை குத்தி, தூக்கியெறியும் இக்கலாச்சாரம், குழந்தைகளை, முதியோரை, தூக்கியெறியத் தயங்குவதில்லை.

இவ்வேளையில், 'மனித வர்த்தகம்' என்ற கொடுமையையும் குறிப்பிட வேண்டும். புவெர்த்தோ மால்தொனாதோ (Puerto Maldonado) விமானத் தளத்திற்கு நான் வந்து சேர்ந்ததும், 'மனித வர்த்தகம் குறித்து விழிப்பாயிருங்கள்' என்ற அறிக்கையைக் கண்டேன். இது, நம்மிடையே வளர்ந்துவரும் விழிப்புணர்வைக் காட்டுகிறது. இறைவனின் தாய் என்றழைக்கப்படும் இப்பகுதியில், பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளும் அதிகம்.

இளையோர் பலர், வீடு, நிலம், வேலை இவற்றைத் தேடி, இங்கிருந்து வெளியேறியுள்ளனர். தங்கம் தோண்டியெடுக்கும் சுரங்கத் தொழில், இவர்களில் பலரை ஈர்க்கிறது. தங்கம் ஒரு பொய் கடவுளாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

பேராசை, பணம், அதிகாரம் என்ற பொய் கடவுள்கள், அனைத்தையும் அழிக்கவல்லவை. இத்தகையைத் தீய சக்திகளை செபத்தால் வெல்லமுடியும் என்று இயேசு கூறியுள்ளார். எனவே, தீய சக்திகளை எதிர்த்து நிற்க, நீங்கள் நம்பிக்கையுடன், செபத்துடன் கூடிவரவேண்டும். நமக்கு நிலையான, நிரந்தரமான வாழ்வு உண்டு என்று இயேசு வாக்களித்துள்ளார்.

உங்கள் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இறைவனின் தாய் என்ற இந்த நிலத்தின் மீது அன்பு கொள்ளுங்கள். இந்த நிலத்தை, தூக்கியெறியக் கூடிய ஒரு பொருளாகக் கருதாமல், ஒரு கருவூலமாகக் கருதுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் இதைச் சொல்லித் தாருங்கள். இறைவனின் தாய் உங்களைப் பாதுகாப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.