2018-01-19 15:10:00

பெரு நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ்


சன.19,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே நாட்டின் இக்கிக்கெ நகரிலிருந்து 2 மணி 10 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து பெரு நாட்டுத் தலைநகர் லீமாவை அடைந்தபோது, சனவரி 18, இவ்வியாழன் உள்ளூர் நேரம் மாலை 5 மணி 20 நிமிடங்களாகும். அப்போது இந்திய நேரம் இவ்வெள்ளி காலை 5 மணி 50 நிமிடங்களாகும். பெரு நாட்டின் அரசுத்தலைவர் Pedro Pablo Kuczynski, தனது துணைவியாரோடு விமானத்தளத்தில் திருத்தந்தையை வரவேற்றார். இரு சிறார் மரபு உடைகளில் திருத்தந்தைக்கு மலர்களை அளித்தனர். பெரு நாட்டு இசைக்குழு இன்னிசை முழங்கியது. விமானத்தளத்தில், முக்கிய அரசு அதிகாரிகள், ஆயர்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகளும் திருத்தந்தையை வரவேற்றனர். 21 துப்பாக்கிகள் முழங்க, இராணுவ அணிவகுப்பு மரியாதையும் திருத்தந்தைக்கு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் விமானத்தளத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள லீமா நகர் திருப்பீட தூதரகத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. வழியெங்கும் மக்கள் வெள்ளமென திரண்டு திருத்தந்தையை வாழ்த்தினர். திருப்பீட தூதரகத்திற்குமுன் காத்திருந்த மக்களிடம், ஏற்கனவே இரவாகிறது, எல்லாரும் உறங்கச் செல்லும் நேரம் இது, நானும் உறங்கச் செல்கிறேன், எல்லாரும் சேர்ந்து, அருள்நிறைந்த மரியே என்று அன்னை மரியை நோக்கிச் செபிப்போம் என்று சொல்லி, அச்செபத்தைச் செபித்தார். திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இவ்வியாழன் தின பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன.

சனவரி 19, இவ்வெள்ளி காலை 7 மணிக்கு, லீமா திருப்பீட தூதரகத்தில் தனியாக திருப்பலியை நிறைவேற்றிய பின்னர், லீமா நகர் பன்னாட்டு விமான நிலையம் சென்று அமேசான் பகுதிக்கு நுழைவாயில் நகரமான Puerto Maldonado சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பெரு நிலப்பகுதியில், ஏறத்தாழ அறுபது விழுக்காடு அமேசான் பருவமழைக்காடுகள் பகுதியாகும். பெரு நாடு பல்வேறு இன, கலாச்சாரங்களைக் கொண்டுள்ளது. அந்நாட்டில் 42 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் அதிகமானவை அமேசான் பகுதியில் பேசப்படுகின்றன. Puerto Maldonadoவில் பல்வேறு பூர்வீக இனத்தவரின் நான்காயிரம் பிரதிநிதிகளைத் திருத்தந்தை சந்திக்கிறார்.  மேலும், பெரு நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், அந்நாட்டின் வடக்கிலுள்ள கடற்கரை நகரமான Trujilloவுக்கும் செல்வார் திருத்தந்தை. இந்நாட்டில் பயண நிகழ்வுகளை வருகிற ஞாயிறு மாலை 6.45 மணிக்கு, இந்திய இலங்கை நேரம், சனவரி 22, வருகிற திங்கள் காலை 5.15 மணிக்கு நிறைவுசெய்து, உரோம் நேரம் பகல் 2.15 மணிக்கு உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணம் முற்றுப்பெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.