2018-01-19 15:04:00

கீழே விழுந்த காவல்துறை அதிகாரிக்கு திருத்தந்தை ஆறுதல்


சன.19,2018. இக்கிக்கெ நகரின் Lobito வளாகத்திலிருந்து திறந்த காரில் திருத்தந்தை சென்ற சமயம், பணியிலிருந்த காவல்துறை பெண் அதிகாரி Ana Belén Aguilera Casas அவர்கள் அமர்ந்திருந்த குதிரை பயத்தில் தடுமாறி, காலால் உதைக்க, அந்த அதிகாரி திருத்தந்தை சென்ற காரைத் தொடுவதுபோன்று கீழே விழுந்தார். உடனே காரிலிருந்து இறங்கிய திருத்தந்தை, அந்த அதிகாரியிடம் சென்று ஆறுதல் கூறினார். அவசர மருத்துவ வாகனம் வந்து அந்த அதிகாரியை ஏற்றிச் செல்லும்வரை காத்திருந்து, பின் காரில் ஏறினார் திருத்தந்தை. அந்த அதிகாரிக்கு இலேசான காயம் என்று செய்திகள் கூறுகின்றன. Lobito வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், அந்த இடத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அமலமரி தியாகிகள் அருள்பணியாளர் சபையினர் நடத்தும் லூர்து அன்னை திருத்தலம் சென்றார் திருத்தந்தை. அச்சபையினர் 1949ம் ஆண்டிலிருந்து இத்திருத்தலத்தைப் பராமரித்து வருகின்றனர். அச்சபையினர் இல்லத்தில் மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்த திருத்தந்தை, உள்ளூர் நேரம் மாலை 4.45 மணிக்கு, இக்கிக்கெ “Diego Aracena” விமான நிலையத்திற்குச் சென்று சிலே நாட்டு மக்களுக்கு நன்றியும், வாழ்த்தும் சொல்லி பெரு நாட்டுக்குப் புறப்பட்டார். வழியில் சிலே அரசுத்தலைவருக்கு நன்றியும், வாழ்த்தும் செபமும் நிறைந்த தந்திச் செய்தியையும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் சிலே நாட்டுக்கான மூன்று நாள் திருத்தூதுப்பயணம் நிறைவடைந்தது. சிலே நாட்டின் இக்கிக்கே திருத்தலத்தில், அந்நாட்டின் சர்வாதிகாரி அகுஸ்தோ பினோஷேயின் இராணுவ ஆட்சியில், 1970களில் பலியானவர்களின் குடும்ப உறவுகளையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.