2018-01-18 09:40:00

பெண் சிறைக் கைதிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


சன.17,2018. அன்பு சகோதரிகளே, சகோதரர்களே, நன்றி, நன்றி, நன்றி... நீங்கள் செய்துள்ள அனைத்திற்கும், உங்களைச் சந்திக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கும் நன்றி. வாழ்வு எப்போதும் சாவை வெல்கிறது என்ற கருத்தைப் பகிர்ந்துகொண்ட அருள்சகோதரி நெல்லிக்கு (Sister Nelly) நன்றி. சமுதாயத்தால் தான் காயங்கள் அடைந்தாலும், தன்னால் காயமடைந்தவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் துணிந்த ஜானெத்துக்கும் (Janeth) நன்றி. உன்னிடமிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மன்னிப்பு கேட்கும் மனநிலை இல்லையெனில், நாம் செய்த தவறையும் மறந்துவிடுகிறோம்.

நான் இங்கு வந்தபோது, சில அன்னையர் தங்கள் குழந்தைகளுடன் என்னைச் சந்தித்தனர். அவர்கள் எனக்களித்த வரவேற்பை, அன்னை, குழந்தைகள் என்ற இரு சொற்களில் விவரிக்க விரும்புகிறேன்.

முதல் சொல், அன்னை. உங்களில் பலர், அன்னையர். இவ்வுலகிற்கு ஒரு புது உயிரைக் கொணரும் பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள். அன்னையாய் இருப்பது, ஒருபோதும் பிரச்சனை அல்ல; அது, இவ்வுலகில் கிடைக்கக்கூடிய மாபெரும் கொடை. ஓர் அன்னை என்ற முறையில், நீங்கள் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் நம்பிக்கை அளிப்பவர்களாய் இருக்கிறீர்கள்.

இரண்டாவது சொல், குழந்தைகள். இறந்தகாலத்தில் வாழ்வதற்கல்ல, எதிர்காலத்தில் வாழ்வதற்கே என்பதைச் சொல்லித்தருவது, நம் குழந்தைகளே. இன்று உங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால், விரைவில் நீங்கள் சமுதாயத்தில் இணைந்து வாழப்போகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்.

மண்டேலா அமைப்பு, பெண்ணே எழுந்திடு அறக்கட்டளை போன்ற திட்டங்கள் வழியே நீங்கள் ஆற்றிவரும் பணிகளை நான் பாராட்டுகிறேன். 'பெண்ணே எழுந்திடு' திட்டத்தின் பெயரைக் கேட்டதும், இயேசு, தொழுகைக்கூடத் தலைவரின் மகளை உயிர்ப்பித்த புதுமை நினைவுக்கு வருகிறது. அச்சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் என்று சொன்ன இயேசுவைப் பார்த்து, சூழ இருந்தவர்கள் நகைத்தனர். ஆனால், இயேசு அச்சிறுமியிடம், "சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு" (மாற்கு 5:41) என்று சொன்னார்.

இயேசு அச்சிறுமியிடம் சொன்னதுபோலவே நானும் சொல்கிறேன், "எழுந்திடுங்கள்". எப்போதும் எழுந்திடுங்கள். சிறைக்குச் செல்ல வழங்கப்படும் தீர்ப்பை, எப்போதும் தண்டனையாகவே நோக்குகிறோம். ஆனால், இதனை, நம் மாற்றத்திற்குத் தேவையான ஒரு வழியாகவும் நினைத்துப் பார்க்கலாம். மீண்டும் சமுதாயத்தில் இணையும்வண்ணம் நீங்கள் ஒருவர், ஒருவரை எழுப்பிவிடுங்கள்.

இத்தகைய எண்ணங்களுடன் உங்கள் அனைவரையும் நான் ஆசீர்வதிக்கிறேன். உங்களுக்காகச் செபிக்கிறேன். அன்னை மரியா தன் மேலாடையால் உங்கள் அனைவரையும் பாதுகாப்பாராக. எனக்காக செபிக்க மறவாதீர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.