2018-01-17 14:35:00

திருத்தந்தை : San Joaquin பெண்கள் சிறையில் கைதிகள் சந்திப்பு


சன.17,2018. சனவரி 15, இத்திங்கள் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தென் அமெரிக்க நாடுகளான சிலே மற்றும் பெரு நாடுகளுக்கு, தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கினார். இப்பயணத்தைத் தொடங்கியது முதல், சிலே நாட்டில் திருத்தந்தை நிகழ்த்திவரும் பயண நிகழ்வுகளைப் பார்க்கும்போது, இப்பயணம் முழுவதும் இரக்கம், பரிவன்பு, கருணை போன்ற பண்புகளைக் கொண்டிருக்கின்றது என்றே சொல்ல முடிகின்றது. சனவரி 16, இச்செவ்வாய் மாலை 3.40 மணிக்கு, சிலே நாட்டின் தலைநகர் சந்தியாகோவிலுள்ள San Joaquin பெண்கள் சிறைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பெண்கள் சிறைக்கு திருத்தந்தை செல்வது இதுவே முதன்முறையாகும். இப்பெண்கள் சிறை ஆரம்பிக்கப்பட்ட 1864ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி முதல், 1996ம் ஆண்டு மே 31ம் தேதி வரை, இச்சிறையைப் பராமரிக்கும் பொறுப்பை, சிலே அரசு, நல்ல ஆயர் அருள்சகோதரிகள் சபையிடம் ஒப்படைத்திருந்தது. இச்சிறையில், 1980ம் ஆண்டுவரை 160க்கும் குறைவாகவே கைதிகள் இருந்தனர். பின்னர், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததால், இரண்டாயிரமாம் ஆண்டில் கைதிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,400 ஆக உயர்ந்தது. தற்போது 885 கைதிகள் உள்ள இந்தச் சிறையில், 45 விழுக்காட்டினர் பெண்கள். இவர்களில் பெரும்பகுதியினர் குழந்தைகளுடன் உள்ளனர். இச்சிறையில், குழந்தைகள் இரண்டு வயதுவரை, கைதித் தாய்மார்களோடு தங்கியிருக்கலாம். San Joaquin சிறையில் நடந்த திருத்தந்தையின் நிகழ்வில், நன்னடத்தையில் முன்னேற்றம் காண்பித்த கைதிகள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பல கைதிகள் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தனர். இந்நிகழ்வு நடைபெற்ற அறையை அலங்கரித்திருந்த, புறா வடிவ வெள்ளைக் காகிதங்கள், பெண் கைதிகள் தயாரித்தவை. அவற்றில், அவர்கள் தங்கள் பெயர்களையும் எழுதி வைத்திருந்தனர். மேலும், இந்த அறையை பலவண்ண காகிதங்களில் கைதிகள் அழகுபடுத்தியிருந்தனர். இக்கைதிகளுக்கு, கடந்த 13 ஆண்டுகளாக ஆன்மீகப் பணியாற்றும் அருள்சகோதரி நெல்லி லியோன் அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசுகையில், சிலே நாட்டில் பெருமளவில் ஏழைகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கவலை தெரிவித்தார். பின்னர், கைதிகளின் சார்பாகப் பேசிய Janeth Zurita அவர்கள், சிலே நாட்டிலுள்ள, ஏறத்தாழ ஐம்பதாயிரம் ஆண் மற்றும் பெண் கைதிகள், தங்களின் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர், எங்களை மன்னிக்குமாறு அனைத்து கைதிகள் சார்பாகக் கேட்கிறேன் என்று திருத்தந்தையிடம் கூறினார். இந்தப் பகிர்வுகளைக் கேட்டபின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார்.

மன்னிப்பின்றி நாம் மனிதத்தை இழக்கின்றோம். சிறைக்கம்பிகள், கனவுகாணும் சக்தியை நிறுத்துவதில்லை என்று கூறி, பெண் கைதிகளைத் தேற்றி, அவர்கள் அமர்ந்திருந்த இடங்களுக்குச் சென்று கைகுலுக்கி வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். கைதிகள் மிகுந்த உற்சாகத்துடன், நன்கு பழகி வைத்திருந்த பாடல்களைப் பாடினர். இந்நிகழ்வை நிறைவு செய்து, San Joaquin சிறைக்கு வெளியே வந்த திருத்தந்தையுடன், சிறைக்காவலர்கள், புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அதன்பின்னர், அச்சிறையிலிருந்து பதினான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும், சந்தியாகோ நகரின் Armas வளாகத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.