2018-01-15 14:41:00

வெனிசுவேலா மக்களின் குரல்களை குற்றமாக நோக்கும் அரசு


சன.15,2018. வெனிசுவேலா அரசின் கொள்கைகளால், அந்நாடு முன்னெப்போதும் கண்டிராத அளவு, பதட்ட நிலைகளை எதிர் நோக்கி வருவதாகவும், அந்நாட்டில், ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, இரந்துண்ணுதல், இலஞ்ச ஊழல், போதிய அடிப்படை வசதிகளின்மை போன்றவற்றுடன், நம்பிக்கையின்மையும் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

கரகாஸ் நகரில் தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்ட்டத்தை நிறைவுசெய்து அறிக்கியொன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், அரசின் உதவித் திட்டங்களையே மக்கள் சார்ந்திருக்கும் ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் மனங்களில் வெறுப்பும் குடியேறி, வேறு இடங்களைத் தேடி, அவர்கள் குடிபெயரும் ஒரு சூழல் உருவகியுள்ளது என, அரசின் திட்டங்களை குறைகூறியுள்ளனர் ஆயர்கள்.

அரசின் சர்வாதிகாரப்போக்கு, அனைத்தையும் தன் கீழ் கொண்டு வந்துள்ளதுடன், எதிர்ப்புக் குரல்களை, தண்டனைக்குரிய குற்றமாக மாற்றியுள்ளது எனவும் கவலையை வெளியிட்டுள்ளனர், ஆயர்கள்.

வெனிசுவேலா நாட்டில் எதிர்பார்க்கப்படும் தேர்தல், வெளிப்படையான நிலையில் இடம்பெறவேண்டும் எனவும், அனைத்துலக பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பம் ஒன்றை முன்வைத்துள்ளனர், ஆயர்கள்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.