2018-01-15 15:02:00

சிலே நாட்டுத் திருத்தூதுப்பயணம், ஒரு முன்தூது


சன.15,2018. “சிலே மற்றும் பெரு நாடுகளுக்கு நான் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணத்திற்காகச் செபியுங்கள்”. இவ்வாறு, சனவரி 15, இத்திங்கள் காலையில் தன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டு, இந்த தென் அமெரிக்க நாடுகளுக்கு, தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்னை மரியா மீது அளவற்ற பக்திகொண்டுள்ள திருத்தந்தை, சனவரி 13, இச்சனிக்கிழமை மாலையில், உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, உரோம் மக்களுக்குக் குணமளிக்கும் அன்னை மரியிடம், சிலே மற்றும் பெரு நாடுகள் திருத்தூதுப்பயணத்தை அர்ப்பணித்துச் செபித்தார். வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணங்களைத் தொடங்குவதற்கு முன்னும், அப்பயணங்களை நிறைவுசெய்து வத்திக்கான் திரும்பும்போதும், உரோம் மேரி மேஜர் பசிலிக்கா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்கள் உரோம் நேரம் காலை 7.50 மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து காரில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை 8.55 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஆல்இத்தாலியா B777 விமானத்தில், சிலே நாட்டுத் தலைநகர் சந்தியாகோ நகருக்குப் புறப்பட்டார். இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்களுக்குத் தனது வாழ்த்தையும் செபங்களையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியையும் அனுப்பியுள்ள திருத்தந்தை, வழியில் கடந்து செல்கின்ற பிரான்ஸ், இஸ்பெயின், மொரோக்கோ, கேப் வெர்தே, செனெகல், பிரேசில், பராகுவாய், அர்ஜென்டீனா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் தந்திச் செய்திகளை அனுப்பினார். 12 ஆயிரத்து 504 கிலோ மீட்டர் தூரத்தை 15 மணி, 40 நிமிடங்கள் பயணம் செய்து, சிலே நாட்டின் சந்தியாகோ நகரை திருத்தந்தை சென்றடையும்போது, உள்ளூர் நேரம் திங்கள் இரவு 8 மணி 10 நிமிடங்களாக இருக்கும். அப்போது, இந்திய இலங்கை நேரம் செவ்வாய் அதிகாலை 4.40 மணியாக இருக்கும்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தில், முதலில் செல்கின்ற நாடு சிலே. இந்நாடு, கிழக்கே ஆன்டெஸ் மலையையும், மேற்கே பசிபிக் பெருங்கடலையும், வடக்கே பெரு நாட்டையும், வடகிழக்கே பொலிவியா நாட்டையும், கிழக்கே அர்ஜென்டீனா நாட்டையும், தெற்கே Drake நீர்வழிப் பாதையையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேலும், அன்டார்டிக்டா பெருங்கடலின் ஏறத்தாழ 12 இலட்சத்து, ஐம்பதாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் இந்நாடு கொண்டிருக்கின்றது. Juan Fernández, Salas y Gómez, Desventuradas, Easter Island ஆகிய பசிபிக் தீவுகளும், சிலே நாட்டிற்குரியவைகளாகும். சிலே நாட்டின் வடக்கேயுள்ள Atacama வறண்ட பாலைவனம், பெருமளவில் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு செம்பு கனிமம் அதிகமாக உள்ளது. மக்கள் அதிகமாக வாழ்கின்ற இந்நாட்டின் மத்திய பகுதியில், வேளாண் தொழில் அதிகமாகச் செய்யப்படுகின்றது. அத்துடன், அரசியல் மற்றும் கலாச்சார மையமாக விளங்கிய இப்பகுதி, 19ம் நூற்றாண்டில், நாட்டின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளோடு இணைந்ததன் பயனாக, நாடு பரந்து விரிந்தது. சிலே நாட்டின் தெற்குப் பகுதி அடர்ந்த காடுகளையும், மேய்ச்சல் நிலங்களையும், எரிமலைப் பகுதியையும், ஏரிகளையும் கொண்டிருக்கின்றது. நாட்டின் தெற்கு கடற்கரை, கால்வாய்கள், தீபகற்பங்கள், தீவுகள் போன்ற இயற்கை வளங்களால் நிறைந்து வனப்போடு காணப்படுகின்றது.

இஸ்பெயின் நாடு, 16ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், சிலே நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில், Inca ஆட்சியைக் கவிழ்த்து, அப்பகுதியை தனது காலனியாக மாற்றியது. ஆயினும், இஸ்பெயின் நாடு, சிலே நாட்டின் மத்திய தென் பகுதியில் வாழ்ந்த Mapuche இன மக்களைத் தோற்கடித்து, அம்மக்களையும் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருவதில் தோல்வி கண்டது. இறுதியில், 1818ம் ஆண்டில் இஸ்பெயின் நாட்டிலிருந்து விடுதலை அடைந்த சிலே நாடு, 1830களில், சர்வாதிகார குடியரசாக மாறியது. 19ம் நூற்றாண்டில், பொருளாதாரத்திலும், நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது சிலே. 1880களில் Mapuche இனத்தவரின் எழுச்சியை முறியடித்தது, பசிபிக் போரில் (1879–83), பெரு மற்றும் பொலிவியா நாடுகளைத் தோற்கடித்து ஆகியவற்றால் சிலே நாடு, தற்போதைய வடக்குப் பகுதியையும் கைப்பற்றியது. 1960கள் மற்றும் 1970களில், இந்நாடு, கடும் வலது மற்றும் இடதுசாரி அரசியல் நெருக்கடியை அனுபவித்தது. 1973ம் ஆண்டில் நடந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் வழியாக, சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட Salvador Allendeன் வலதுசாரி அரசு வீழ்ந்தது. அதன்பின்னர் நடைபெற்ற 16 ஆண்டுகால இராணுவ சர்வாதிகார ஆட்சியில், மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர் மற்றும் காணாமல்போயினர். சர்வாதிகாரி Augusto Pinochet தலைமையில் நடந்த இந்த அரசு, 1988ம் ஆண்டில் நடந்த பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பின் வழியாக, 1990ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. தற்போது சிலே நாடு, தென் அமெரிக்காவில் நிலையான மற்றும் வளமையான நாடுகளில் ஒன்றாகவும், பொருளாதார வருவாயும், வாழ்க்கைத்தரமும் உயர்ந்துள்ள ஒரு நாடாகவும் விளங்குகிறது.

போர்த்துக்கீசிய மாலுமி பெர்டினான்டோ மஜெல்லானோ என்பவர், 1520ம் ஆண்டில், Chiloe எனும் தீவில் சென்றிறங்கினார். இந்த தீவு பெயராலே, சிலே நாடு என்று, இது அழைக்கப்படுகின்றது. சிலே நாட்டின் தலைநகர் சந்தியாகோ, சிலே நாட்டிலும், அமெரிக்காவிலும் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இஸ்பானிய நாடுகாண் பயணி Pedro de Valdivia என்பவரால், 1541ம் ஆண்டில் இந்நகர் உருவாக்கப்பட்டது. சந்தியாகு என தமிழில் அழைக்கப்படும் புனித யாக்கோபின் பெயரே இந்நகருக்கு சூட்டப்பட்டது. சிலே நாட்டில், இஸ்பானியம் அதிகாரப்பூர்வ மொழியாகும். மேலும், இந்நாட்டில், 89 விழுக்காட்டினர் வெள்ளை இனத்தவர், 9 விழுக்காட்டினர் மப்புக்கே இனத்தவர், ஒரு விழுக்காட்டினர் அய்மாரா இனத்தவர் மற்றும் ஏனைய பூர்வீக இனத்தவர் ஒரு விழுக்காட்டினரும் வாழ்கின்றனர். சிலே நாட்டில் இஸ்பானியப் பேரரசின் காலனி ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து, நற்செய்தியும் பரவத் தொடங்கியது. சிலே மண்ணில், 1520ம் ஆண்டில், மஜெல்லானோ நீர்வழிப்பாதைப் பகுதியில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தற்போது சிலே நாட்டில் 66.7 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், 16.4 விழுக்காட்டினர் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையினர், 1 விழுக்காட்டினர் யெகோவா சபையினர், 11.5 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கையற்றவர் மற்றும் ஏனைய மதத்தவர் 4.5 விழுக்காட்டினரும் உள்ளனர். இந்த சிலே நாட்டில் சனவரி 18ம் தேதி முடிய திருத்தூதுப் பயணத் திட்டங்களை நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.