2018-01-12 14:33:00

இறைவனையும், சகோதர சகோதரிகளையும் இன்றே சந்திக்க..


சன.12,2018. இறைவனையும், நம் சகோதர சகோதரிகளையும் சந்திப்பதற்கு, நாள்களைத் தள்ளிப்போடாமல், அச்சந்திப்பை இன்றே நடத்த வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

சனவரி 14, வருகிற ஞாயிறன்று, 104வது புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “நாம் மெதுவாகச் செயல்படுபவர்கள் அல்லது சோம்பேறிகள் என்ற காரணத்தால், இறைவனையும், நம் சகோதர சகோதரிகளையும் சந்திப்பதற்கு காத்திருக்க இயலாது. இந்த சந்திப்பை இன்றே நடத்துவதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்!” என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

104வது புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாளையொட்டி, சனவரி 14, வருகிற ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 28, ஞாயிறு மாலை 4 மணிக்கு, உரோம் புனித சோஃபியா பசிலிக்காவுக்குச் சென்று, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க சமூகத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பார் என்று திருப்பீடச் செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.

மேலும், இத்தாலியின் லாசியோ மாநிலத்தின் தலைவர், நிக்கோலா ஜிங்கரெத்தி, உரோம் மாநகர மேயர், விர்ஜீனியா ராஜ்ஜி ஆகியோரை, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.