2018-01-11 10:42:00

போலந்தில் மூன்று அரசர்கள் பேரணிகளில் 12 இலட்சம் மக்கள்


சன.10,2018. மூன்று அரசர்களின் நினைவாக, போலந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிகளில் 12 இலட்சம் மக்கள் கலந்துகொண்டனர் என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஜெர்மனி, ஆஸ்திரியா, இரஷ்யா ஆகிய நாடுகளிடமிருந்து விடுதலை பெற்று, 1918ம் ஆண்டு, போலந்து நாடு குடியரசாக நிறுவப்பட்டதன் முதல் நூற்றாண்டை சிறப்பிக்கும் வண்ணம், மூன்று அரசர்களின் பேரணி, இவ்வாண்டு, போலந்து நாட்டின் 660 நகரங்களிலும், சிற்றூர்களிலும் நடைபெற்றது.

"இறைவன் ஒவ்வொருவருக்கும் உரியவர்" என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இந்தப் பேரணியில், மூன்று அரசர்கள், மூன்று தலைமுறைகளை சித்திரிக்கும் வண்ணம், ஒருவர் இளையோராக, மற்றொருவர் நடுத்தர வயதினராக, மூன்றாமவர் வயது முதிந்தவராக பங்கேற்றனர் என்று Zenit செய்தி கூறியுள்ளது.

வார்சா நகரில் நடைபெற்ற பேரணியில், போலந்து நாட்டின் அரசுத்தலைவர், Andrzej Duda அவர்கள், இவ்வாண்டு, மூன்றாம் முறையாகப் பங்கேற்றார் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.