2018-01-10 14:16:00

இமயமாகும் இளமை..... கல்லூரி மாணவர்களின் ‘மலேரியா’ செயலி


தகவல் தொழி்ல்நுட்பத் துறையின் அசுர வளர்ச்சியால் பலதரப்பட்ட விடயங்கள் சார்ந்த புதுப்புது கைபேசி செயலிகள் உதவியுடன், பல வேலைகளைச் சில நொடிகளில் கைபேசியிலேயே முடித்துவிட முடிகிறது. இத்தகைய சூழலில், சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் இணைந்து, தங்கள் ‘புராஜெக்ட்’ஆக சமுதாயத்துக்குப் பயனுள்ள வகையில் புதிதாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். அது, மலேரியாவைக் கண்டறியும் மென்பொருள். கிராமப்புறங்களில் நோய்களைக் கண்டறியும் வசதியை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது, இந்த மாணவர்களின் விருப்பமாம்.

கைபேசி கேமராவின் பின்னே இணைக்கக்கூடிய சிறிய மைக்ரோஸ்கோப் கருவி ஒன்றை உருவாக்கி, இதைப் பயன்படுத்தி நோயாளியின் இரத்த மாதிரிகளைப் படம் எடுக்கவும், பிறகு, கைபேசியில் இணைக்கப்பட்டுள்ள மைக்ராஸ்கோப் மூலம் நோயாளிகளின் இரத்த மாதிரிகளில், மலேரிய நோய்க் கிருமிகள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கவும் உதவுகிறது இந்த செயலி.

பிறகு, இந்த மருத்துவ அறிக்கையை அருகே இருக்கும் ஒரு மருத்துவரின் கைபேசிக்கு அனுப்ப முடியும். இதன்மூலம், மருத்துவ வசதி பெற முடியாத இடத்தில் இருக்கும் ஒரு நோயாளி, இந்த எளிய கையடக்க மருத்துவச் சாதனம் மற்றும் கைபேசி செயலி உதவியுடன் தனது மருத்துவ விவரங்களை வேறொரு இடத்தில் இருக்கும் மருத்துவருக்கு அனுப்பி, மருத்துவ ஆலோசனை பெறலாம். இதைச் செய்ய ‘இமேஜ் புராசஸிங் டெக்னிக்’என்ற தொழி்ல்நுட்பம் பயன்படுகிறது”என்கிறார்கள், இந்த மாணவர்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில், இந்தியாவின் 990 பொறியியல் கல்லூரிகளிலிருந்து ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் கலந்துகொண்டு தங்கள் புராஜெக்ட்டுகளை முன்வைக்கும் போட்டி நடத்தப்பட்டது. கடுமையான அந்தப் போட்டியில், மலேரியாவைக் கண்டறிவது தொடர்பாக இந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய இத்திட்டம், இறுதிப் போட்டியில் ‘புகழ்பெற்ற புராஜெக்ட்’ என்ற விருதைப் பெற்றுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.