2018-01-06 15:31:00

கீழ்த்திசை ஞானிகள் போன்று இயேசுவை கவனமுடன் தேடுவோம்


சன.06,2018. இயேசுவின் இவ்வுலக வருகையும், அவர் உலகுக்கு தம்மை வெளிப்படுத்தியதும், கவனமுடன் தேடுதல், அக்கறையற்றநிலை, பயம் ஆகிய மூன்று கூறுகள் பற்றி சிந்திப்பதற்கு அழைக்கின்றன என்று, மூவேளை செப உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழாவான, இச்சனிக்கிழமை நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்மீனைக் கண்ட மூன்று கீழ்த்திசை ஞானிகள், மெசியாவைத் தேடுவதற்குத் தயங்காமல், எருசலேம் சென்று, ஏரோது அரசனிடம் மெசியா பற்றிக் கேட்டனர் என்று கூறினார்.

இந்த ஞானிகள், புதிதாகப் பிறந்திருந்த அரசரைக் கவனமுடன் தேடியது, யூத தலைமைக் குருக்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் அக்கறையற்ற நிலைக்கும், பெத்லகேமில் பிறந்திருந்த குழந்தை, தனது அதிகாரத்தை அகற்றிவிடும் என்று அஞ்சிய ஏரோதின் எண்ணத்திற்கும் முரணாக அமைந்திருந்தது என்று திருத்தந்தை கூறினார்.

நற்செய்தியில் நாம் காணும், கவனமுடன் தேடுதல், அக்கறையற்றநிலை, பயம் ஆகிய மூன்று மனப்பான்மைகளில் எதை நாம் தேர்ந்துகொள்கிறோம் என்று கேள்வி எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று கீழ்த்திசை ஞானிகளைப் பின்செல்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

இன்னும், சனவரி 06ம் தேதியன்று, மறைப்பணி சிறார் நாள் சிறப்பிக்கப்பட்டவேளை, அச்சிறாருக்கும் வாழ்த்துச் சொன்ன திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்திலும், உடன்பிறப்பு உணர்விலும், அதிகம் உதவி தேவைப்படும் தங்களையொத்த வயதுடைய சிறாருடன் பகிர்ந்து வாழ்வதிலும், மறைப்பணி சிறார் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.