2018-01-06 15:41:00

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவருக்கு திருத்தந்தை கிறிஸ்மஸ் வாழ்த்து


சன.06,2018. மூவேளை செப உரையின் இறுதியில், இந்நாள்களில் கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கும், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கும், கத்தோலிக்கருக்கும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவருக்கும் தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்த மகிழ்வான கொண்டாட்டம், இயேசுவை ஆண்டவரும் மீட்பருமாக ஏற்கும் கிறிஸ்தவர்களாகிய நம் மத்தியில் ஒன்றிப்புக்கும், புதிய ஆன்மீகத் தூண்டுதலுக்கும் ஊற்றாக அமைவதாக என்றும் திருத்தந்தை வாழ்த்தினார்.

எகிப்து நாட்டு காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை திருத்தந்தையான Twadros அவர்களுக்கு, சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, கெய்ரோவில் புதிய பேராலயம் திருநிலைப்படுத்தப்படும் இவ்வேளையில், காப்டிக் கிறிஸ்தவ உடன்பிறப்புகளுக்கும், எனது சகோதரர் Twadros அவர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார்.

இன்னும், ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழாவான இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “மூன்று கீழ்த்திசை ஞானிகளைப் போன்று, விசுவாசிகள், விசுவாசத்தால் வழிநடத்தப்பட்டு, மிகவும் மறைவான இடங்களில், கடவுளைத் தேட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் மறைவான இடங்களில் ஆண்டவர் தங்களுக்காகக் காத்திருக்கின்றார் என்பதை அறிந்தவர்களாய், அந்த இடங்களில் அவரைத் தேட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவான சனவரி 07, இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு, வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயத்தில், திருப்பலி நிறைவேற்றி, பல நாடுகளின் 34 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்குவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.