2018-01-05 15:50:00

இத்தாலிய கத்தோலிக்க ஆசிரியர் கழகத்தினர் சந்திப்பு


சன.05,2018. சந்திப்பு கலாச்சாரம், பள்ளிக்கும் குடும்பத்திற்கும் இடையேயுள்ள கூட்டிணைப்பு, சுற்றுச்சூழல் கல்வி, கழகங்களை ஊக்குவித்தல் ஆகிய தலைப்புகளில் சிந்தனைகளை வழங்கவுள்ளதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இத்தாலிய கத்தோலிக்க கழகத்தினரிடம், இவ்வெள்ளியன்று கூறினார்.

உரோம் நகரில் மூன்று நாள் தேசிய மாநாட்டை இவ்வெள்ளியன்று நிறைவு செய்த, இத்தாலிய கத்தோலிக்க ஆசிரியர் கழகத்தின் ஏறத்தாழ நானூறு உறுப்பினர்களை, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

திருஅவை, சந்திப்பு கலாச்சாரத்தை மிகுந்த அர்ப்பணத்தோடு ஊக்குவித்து வருவதைப் பாராட்டிப் பேசிய திருத்தந்தை, கிறிஸ்தவ ஆசிரியர்கள், கத்தோலிக்க அல்லது அரசுப் பள்ளிகளில் பணியாற்றினாலும், மாணவர்கள், மற்றவரை, உடன்பிறந்தவர்களாக மதித்து ஏற்பதற்கு கற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் இடையேயுள்ள உறவை ஊக்கப்படுத்துமாறும் கூறியத் திருத்தந்தை, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாக்கும் எண்ணத்தில், மாணவர்கள் தங்கள் வாழ்க்கைத்தரத்தை மாற்றும் வழிகள் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

கழகங்களை அமைத்துச் செயல்படுவதன் மதிப்பு குறித்தும் விளக்கிய திருத்தந்தை, காலத்தின் அடையாளங்களை அறிந்து, சமூக மற்றும் கலாச்சார எல்லைகளுக்குத் திறந்தமனம் உள்ளவர்களாய், தூண்டுதல்தரும் கொள்கைகளின் அடிப்படையில் கழகத்தை உருவாக்குமாறு கூறினார்.

பொதுநிலையினர் கழகங்கள் அமைப்பதில் உருவாகும் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் குறித்து அஞ்சாமலும், அதேநேரம் அவற்றை மறைக்காமலும் இருந்து, நற்செய்தி காட்டும் அறிவுரைகளின்படி செயல்படுமாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.