2018-01-04 15:09:00

பெருவில் சாலை விபத்தில் பலியானவர்களுக்குச் செபம்


சன.04,2018. பெரு நாட்டில் இப்புதனன்று இடம்பெற்ற பயங்கரமான சாலை விபத்தில், பலியானவர்கள் மற்றும் காயமுற்றோரின் குடும்பங்களுக்கு தனது செபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தென் அமெரிக்க நாடான பெருவில், Huachoவிலிருந்து தலைநகர் லீமாவுக்கு, 57 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பேருந்து, சாத்தானின் வளைவு எனப்படும் ஆபத்தான இடத்தில், பாறையில் மோதி, நூறு மீட்டர் தூரத்திலிருந்து தலைகீழாகக் கடலில் விழுந்ததில் குறைந்தது 51 பேர் இறந்துள்ளனர். மேலும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Pasamayo என்ற இடத்தில் நடந்த இந்த விபத்து குறித்து திருத்தந்தையின் பெயரில் தந்திச் செய்தி அனுப்பியுள்ள, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் செபங்களையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்து குறித்து மிகவும் கவலையடைந்துள்ள திருத்தந்தை, இவ்விபத்தில் இறந்தவர்கள், இறைவனின் நிறைசாந்தியைப் பெறுவதற்குச் செபிக்கின்றார் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள், அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பெரு நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.