2018-01-03 15:02:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 7


சன.03,2018. ‘பொதுச்சங்கம் என்பது, உலகிலுள்ள ஆயர்கள் ஒன்றுகூடி, திருஅவையின் நலனுக்கென முடிவுகள் எடுத்துச் செயல்பட முனைவதைக் குறிக்கின்றது என, இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் நூல் கூறுகின்றது. திருஅவையின் வரலாற்றில், தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை, 21 அல்லது 22 பொதுச்சங்கங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கணிக்கப்படுகிறது. ஆனால் எல்லாப் பொதுச்சங்கங்களிலும், அவ்வப்போது வாழ்ந்த எல்லா ஆயர்களும் பங்குகொள்ளவில்லை. இந்தப் பொதுச்சங்கங்கள் ஒவ்வொன்றிலும், அந்தந்தக் காலத்தில் திருஅவையின் கோட்பாடுகளுக்கு முரணாக எழுந்த முக்கிய பொருள் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். கி.பி.325ம் ஆண்டில் நிகழ்ந்த, முதலாம் நீசேயா பொதுச்சங்கத்தில், கிறிஸ்துவின் இறையியல்பு விவாதிக்கப்பட்டது. ஏனென்றால் அக்காலக்கட்டத்தில், ஆரியுஸ் என்பவர், இயேசு கிறிஸ்து இறையியல்பைக் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் படைக்கப்பட்டவரே என்று போதித்தார். இதனால் கிறிஸ்தவ உலகில் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கி, அமைதியையும், ஒன்றிப்பையும் கொணரும் நோக்கத்தில், உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அவர்கள், நீசேயாவில் பொதுச் சங்கத்தைக் கூட்டினார். இச்சங்கத்தில் ஆரியுஸ் என்பவரின் கொள்கை தவறு என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆரியுஸ் பிரச்சனை முற்றிலும் தீர்ந்தபாடில்லை. ஆரியுசும், அவரது ஆதரவாளர்களான நிக்கோமேதிய யுசேபியுசுஸ் போன்றோரும், நீசேயா விசுவாச அறிக்கையை ஓரளவு ஏற்றுக்கொண்டதால், அவர்கள் மீண்டும் திருஅவையில் சேர்க்கப்பட்டனர். இதனை, எகிப்து நாட்டு அலெக்சாந்திரியாவின் ஆயராகப் பணியாற்றிய புனித அத்தனாசியுஸ் கடுமையாய் எதிர்த்தார். ஏனென்றால் இவர், ஆரியனிசத்தைக் கடுமையாய்ச் சாடியவர். எனினும், யுசேபியுசின் தூண்டுதலால், உரோமைப் பேரரசர்  அத்தனாசியுசை நாடு கடத்தினார். கி.பி.337ம் ஆண்டில் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் காலமானதைத் தொடர்ந்து, அவரது மகன் 2ம் கான்ஸ்டன்டைன் அரியணையில் அமர்ந்தார். ஆரியனிச ஆதரவாளரான 2ம் கான்ஸ்டன்டைன், நீசேயா விசுவாச அறிக்கையை மாற்றுவது பற்றிய பொதுவான விவாதத்தை நாடெங்கும் ஆரம்பித்தார். கி.பி.360ம் ஆண்டு வரை, மூவொரு கடவுளின் இரண்டாவது ஆளாகிய மகனின் இறைத்தன்மை பற்றிய விவாதம் நடந்தது. மேலும், மூவொரு கடவுளில் மூன்றாவது ஆளாகிய தூய ஆவியாரின் இறைத்தன்மையும், நீசேயா பொதுச்சங்கத்தில் தெளிவுபடுத்தப்படாததால், இந்தப் பேருண்மை பற்றிய விவாதமும் முக்கிய பொருளாக இருந்தது. மாசிதோனியர்கள், தூய ஆவியாரின் இறைத்தன்மையை ஏற்க மறுத்தனர். அதேசமயம், நீசேயா விசுவாச அறிக்கையை, அத்தனாசியுஸ் தவிர, கப்பதோக்கிய திருஅவைத் தந்தையரும் ஆதரித்தனர்.

மேலும், நீசேயா அறிக்கையை ஆதரித்த லவ்தோக்கியாவின் அப்போலினாரிஸ் என்ற இறையியலாளர், கிறிஸ்து கடவுள் இல்லை என்ற ஆரியனிசத்தை மிக அதிகமாக எதிர்த்துப் போதித்தார். இது எந்த அளவுக்குச் சென்றது என்றால், கிறிஸ்து மனித உடலையும், இறைத்தன்மைகொண்ட மனதையும் கொண்டிருந்தார் என்று அவர் போதித்தார். இதனை, செசாரியாவின் புனித பெரிய பேசில் கடுமையாய்க் கண்டித்துப் பேசினார். கி.பி.362ம் ஆண்டில், அலெக்சாந்திரியாவில் அத்தனாசியுஸ் தலைமையில் நடந்த ஆயர்கள் பேரவையில் அப்போலினாரிஸ் கண்டிக்கப்பட்டார். பின்னர், திருஅவையில் அடிப்படை விசுவாசக் கோட்பாடுகளுக்கு எதிரான பல்வேறு தப்பறைக் கொள்கைகள் பரவத் தொடங்கின. எனவே கிறிஸ்தவ உலகில் ஒற்றுமையும் குலைந்திருந்தது. இச்சூழலில், கி.பி.380ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த உரோமைப் பேரரசர் தெயோதோசியுஸ், கீழைத் திருஅவை, நீசேயா விசுவாச அறிக்கையை ஏற்பதற்கான முயற்சியில் இறங்கினார். ஏனெனில், இப்பேரரசர், நீசேயா விசுவாச அறிக்கையை ஆதரித்தவர். அதோடு, கிறிஸ்தவத்தில் ஏற்பட்டிருந்த விசுவாசம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், திருஅவையில் ஒற்றுமையும், ஒழுங்குமுறையும், கட்டுப்பாடும் நிலவவும் விரும்பினார் பேரரசர் தெயோதோசியுஸ். நாசியானுஸ் புனித கிரகரியும் இதே எண்ணம் கொண்டிருந்தார். இதனால், பேரரசர் தெயோதோசியுஸ், கி.பி.381ம் ஆண்டில், கான்ஸ்தாந்திநோபிள் நகரில் பொதுச் சங்கத்தைக் கூட்டினார். கீழை உரோமைப் பேரரசரின் தலைநகராக விளங்கிய இந்நகரம், ஆரியனிசக் கொள்கையை மிகவும் ஆதரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கான்ஸ்தாந்திநோபிள் நகரில் நடந்த பொதுச் சங்கம், கிறிஸ்தவத்தில் நடந்த இரண்டாவது பொதுச்சங்கம் ஆகும். இச்சங்கம், கான்ஸ்தாந்திநோபிள் நகரின் Hagia Irene ஆலயத்தில், கி.பி.381ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடைபெற்றது. இது பொதுச்சங்கம் என்று, கி.பி.451ம் ஆண்டில் கால்செதோன் பொதுச்சங்கத்தில் உறுதி செய்யப்பட்டது., நீசேயா விசுவாச அறிக்கையை உறுதி செய்யவும், ஆரியனிசத்தைச் சிறிது ஆதரித்தவர்களைத் திருஅவையோடு ஒப்புரவாக்கவும், மாசிதோனிய தப்பறைக்கொள்கைக்கு முடிவு கட்டவும், புனித நாசியானுஸ் கிரகரியை, கான்ஸ்தாந்திநோபிள் ஆயராக ஏற்கவும், முதலாம் கான்ஸ்தாந்திநோபிள் பொதுச் சங்கம் கூட்டப்பட்டது. கீழை பொதுச்சங்கம் என்று முதலில் அழைக்கப்பட்ட இதில், 150 கத்தோலிக்க ஆயர்களும், 36 ஆரியனிச-மாசிதோனியத் தப்பறைக் கொள்கையாளர்களும் கலந்துகொண்டனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.