2018-01-01 15:04:00

இறைவனின் தாய், அன்னை மரியா


சன.01,2018. ஆண்டின் முதல் நாளாகிய இத்திங்களன்று, திருஅவை, இந்நாளை, இறைவனின் தாய் அன்னை மரியாவின் பெருவிழாவாக சிறப்பித்தது. உள்ளூர் நேரம் 10 மணிக்கு, அதாவது, இந்திய மற்றும் இலங்கை நேரம், பிற்பகல் 2.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்னை மரியாவை மையப்படுத்தி, அவர் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

அன்னை மரியாவின் மிக உயரிய சிறப்புப் பட்டமான 'இறைவனின் தாய்' என்ற பெயருடன் ஆண்டின் முதல் நாளை நாம் துவக்குகின்றோம். ஏன் அன்னை மரியாவை நாம், 'இயேசுவின் தாய்' என்று அழைக்காமல், 'இறைவனின் தாய்' என அழைக்கிறோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அன்னை மரியாவில் மனு உருவெடுத்த இறைமகன், நம்மைப்போல் மனித நிலைகளை எடுத்துக்கொண்டார். அன்னை மரியாவை, இறைவனின் தாய் என நாம் அழைக்கும்போது, கடவுள், மனித குலத்திற்கு அருகாமையில் உள்ளார் என்பது நமக்கு நினைவூட்டப்படுகிறது. வானகத்தின் இறைவனும், முடிவற்றவருமான, கடவுள்,  நம்மோடு இருப்பதற்கென, நம்மைப்போல் உருவெடுத்தார்.,

மனிதன் தனியாக இல்லை, அவன் அநாதையும் அல்ல, என்பதை அறியும்போது மகிழ்கிறோம். அன்னை மரியாவின் கைகளில் இருக்கும் இயேசு பாலனைப்போல், நாமும் இறைவனின் கைகளில் குழந்தையாக உள்ளோம். மனித குலம் இறைவனுக்கு மதிப்பு மிக்கது. ஆகவே, மனிதனுக்கு ஆற்றும் பணி, இறைவனுக்கு ஆற்றும் பணியாகிறது. தாயின் வயிற்றில் கருவானது முதல், அனைத்து உயிர்களும், முதியோர், நோயாளிகள், துன்புறுவோர் என, ஒவ்வொரு உயிரும் வரவேற்கப்பட்டு, அன்புகூரப்பட்டு உதவப்படவேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம், ' மரியா, இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்துக் கொண்டிருந்தார்' என்பதைப் பார்த்தோம். கிறிஸ்து பிறப்பு காலத்தில் ஒரு வார்த்தை கூட அன்னை மரியா பேசியதாக இல்லை. பல்வேறு நேரங்களில், பல்வேறு வழிகளில் பேசி வந்த இறைவன், இப்போது, காலம் முழுமைபெற்றபோது, எப்படி அமைதியின் உருவாக, பேசமுடியாத குழந்தையாக உள்ளாரோ, அதேபோல், அன்னை மரியாவும், இயேசு பாலனுடன் கொண்டிருந்த ஒருமைப்பாட்டில் அமைதி காக்கிறார். நாமும், குடிலை அமைதியில் உற்றுநோக்கும்போது, நம் வாழ்வின் அர்த்தத்தை காண்டுகொள்கிறோம். நாம் அமைதி காக்கும்போது, நம் உள்ளத்தில் இறைவன் பேசுவதற்கு அனுமதிக்கிறோம்.

அன்னை மரியா தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தவை, மகிழ்வும், சோகங்களுமே. ஒரு பக்கத்தில், இயேசுவின் பிறப்பு, யோசேப்பின் அன்பு, இடையர்களின் வருகை, ஒளிமிக்க ஓர் இரவு என பல விடயங்கள் மகிழ்வளித்தாலும், மறுபக்கம், வருங்காலம் குறித்த அச்சமும், வீடற்ற நிலையும், சோகங்களாக இருந்தன. அனைத்தையும் அவர் தன்  இதயத்தில் இருத்தி அங்கிருக்கும் இறைவனுடன் உரையாடினார். நாமும் நம் துயர்கள் குறித்து உரையாடலை மேற்கொள்வோம், நம்முள் இருக்கும் இறைவனுடன். நம்மை தன் இதயத்தில் வைத்து காக்கும் இறைவன், இப்போது நம் வாழ்வில் குடிகொள்ள வந்துள்ளார்.

அனைத்தையும் அமைதியாக ஏற்று, இறைவனிடம் கொணர்வது, அன்னை மரியாவின் இரகசியம். அன்னை மரியாவைப்போல் நாமும் இருக்க வேண்டும் என இறைவன் விரும்புகிறார், அதாவது, எளிய மனதினராக, பொருள் செல்வம் இல்லையெனினும், அன்பில் செல்வந்தராக, குற்றமற்றவராக, இயேசுவில் இணைந்து, இறைவனை நம் இதயத்திலும், நமக்கு அடுத்திருப்பவரை நம் வாழ்விலும் கொண்டிருப்பவர்களாக செயல்படவேண்டும் என்று.

அன்னை மரியாவின் மீது பக்தி கொண்டிருப்பது, கிறிஸ்தவ வாழ்வுக்கு தேவையான ஒன்றாகும். அன்னையைப் பார்த்து, எதெது நம் வாழ்வுக்கு முக்கியான தேவை என்பதை கற்றுக் கொள்வோம். நம் அனைவருக்கும் ஓர் அன்னையின் இதயம் தேவை. ஆம், இறைவனின் அன்பை உணரவும், நமக்கு அடுத்திருப்போரின் இதயத்துடிப்புக்களை அறிந்து கொள்ளவும், அன்னையின் இதயம் தேவை. உன்னத படைப்பாம், அன்னை மரியா, இந்த ஆண்டில், இறைமகனின் அமைதியை நமக்கும், இவ்வுலகிற்கும் வழங்குவாராக.

இவ்வாறு தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.