2017-12-27 16:11:00

வீடற்றோருக்கு தினமும் உணவு வழங்கும் உருகுவே இளையோர்


டிச.27,2017. உருகுவே நாட்டின் மோந்தெவீதெயோ (Montevideo) உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 500க்கும் அதிகமான இளையோர் ஒன்றிணைந்து, ஒவ்வொரு நாளும், ஏறத்தாழ 2000 வீடற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

இவ்விளையோரில் பலர், Salta எனுமிடத்தில் அமைந்துள்ள அன்னை மரியா திருத்தலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட திருப்பயணத்தில் பங்கேற்றபின், 'ஒளிமயமான விண்மீன்கள்' என்று பொருள்படும் “Luceros” என்ற அமைப்பை உருவாக்கி, வீடற்றோருக்கு பணியாற்றி வருகின்றனர்.

அதேவண்ணம், புனித அன்னை தெரேசாவின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குழுவைச் சேர்ந்தவர்களும், ஒவ்வொருநாளும் வறியோருக்கு உணவளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று CNA செய்தி கூறுகிறது.

பல்கலைக் கழகங்களில் பயில்வோர், அலுவலகங்களில் பணியாற்றுவோர் இணைந்து, மாலை வேளைகளில் பல குழுக்களாகப் பிரிந்து, இரவு உணவை தயாரித்து, வெவ்வேறு பகுதிகளில் உள்ள வீடற்றோருக்கு வழங்கி வருகின்றனர்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.