2017-12-27 15:10:00

மறைக்கல்வியுரை : ஒளியிருப்பினும், இருளை விரும்பும் மனநிலை


டிச.27,2017. கிறிஸ்து பிறப்பு பெருவிழா நாள், நல்ல தட்ப வெப்பத்துடன், மக்களின் கொண்டாட்டங்களுக்கு உதவி செய்வதாக இருந்தபோதிலும், அதற்கு மறு நாளிலிருந்தே, உரோம் நகரம், மழையைக் கண்டு வருகிறது. இப்புதன் காலையிலும், மழை அவ்வப்போது தன் முகத்தைக் காட்டிக்கொண்டிருக்க, வத்திக்கானின் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பால் அரங்கில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு, தன் மறைக்கல்வி உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடும் இந்தப் புனித காலத்தில், கடவுளின் கொடையாக நமக்கு வந்த இயேசுவின் பிறந்த நாளை சிறப்பிக்கிறோம். அவரே நம் மீட்பர், மற்றும், இந்த உலகின் ஒளி. கிறிஸ்து இன்றி, கிறிஸ்மஸ் என்பது இல்லை. பாவத்தாலும், அநீதியாலும் இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகில், கடவுளின் ஒளி வீசுகின்றது என்ற நம் மகிழ்வை வெளிப்படுத்துவதாக, நம் பாரம்பரியக் கொண்டாட்டங்கள் உள்ளன. தன்னை மறைத்த நிலையிலும், ஏழ்மையிலும், நம்மிடையே வரும் இயேசுவைத் தேடவும், அடையாளம் கண்டுகொள்ளவும், பெத்லகேமின் இடையர்களைப்போல் நாமும் அழைக்கப்பட்டுள்ளோம். இதில் கவலை தரும் விடயம் என்னவென்றால், ஒளி நம்மிடையே வந்துள்ளபோதிலும், பலர் இருளிலேயே வாழ விரும்புகின்றனர். இருப்பினும், இயேசுவின் கொடையைப் பெறுவோர், கடவுளின் மீட்பு அருளையும், புதிய வாழ்வுக்கான வாக்குறுதியையும் குறித்து அறிய வருகின்றனர். இந்த மீட்பு, அருளையும், புதிய வாழ்வையும் குறித்து அறிய வருவது, சுயநலத்தை ஆதாரமாகக் கொண்டதல்ல, மாறாக, அன்பில் நம்மையே நாம் வழங்குவதை சார்ந்தது. கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக்காலத்தில் நாம் பரிசுப் பொருட்களை வழங்கும் பாரம்பரியம், கிறிஸ்து எனும் கொடைக்கு நன்றி நவிலும் அடையாளமாகவும், அவரை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நம் விருப்பத்தின் அடையாளமாகவும் உள்ளது. நம் வரலாற்றில் கடவுளின் திட்டம் குறுக்கிட்டு, அதனோடு கலந்து, ஒரு சிறந்த வருங்காலத்திற்கு, ஒரு புதிய உலகிற்கு,  வழியைத் திறந்துள்ளது என்பதை, கிறிஸ்மஸ் நமக்கு நினைவூட்டுகிறது.  இந்த கிறிஸ்மஸ் காலத்தில், நம் ஒவ்வொருவரிலும், குழந்தை இயேசு புதிதாக பிறக்கட்டும். அத்தகையப் பிறப்பிலிருந்து கிட்டும் வாழ்வின்  வழியாக, குழந்தை இயேசு, மீட்பின் கொடையாக அனவருக்கும் விளங்குவாராக, குறிப்பாக, ஏழைகள், மற்றும், உதவி தேவைப்படும் நம் சகோதர சகோதரிகளுக்கு.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.