2017-12-27 15:33:00

பாசமுள்ள பார்வையில் : ஏழைகளுக்குக் கொடுப்பது, இயேசுவுக்கே...


கிறிஸ்து பிறப்புப் பெருவிழா என்றாலே, குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். அதைத் தொடர்ந்து வரும் புத்தாண்டு, இன்னுமொரு கொண்டாட்டம். பள்ளிகளுக்கு விடுமுறை வேறு. புதுத்துணிகளிலும், பட்டாசுகளிலும், பரிசுப் பொருட்களிலும் தங்களைப் பறிகொடுத்து, ஆனந்தத்தில் இருந்த அண்ணன் சந்திரனும், தங்கை நிலாவும், தங்களுக்கு வந்த கிறிஸ்மஸ் பரிசுப் பொருட்களை ஒவ்வொன்றாக பிரித்துக் கொண்டிருந்தனர். விளையாட்டுச் சாமான்களுடன் நிறையக் கைக்கடிகாரங்களும் வந்திருந்தன. எத்தனை கைக்கடிகாரத்தைத்தான் கட்ட முடியும்?  சில கவர்களில் பணமும் இருந்தது. எல்லாவற்றையும் மொத்தமாக வைத்து எண்ணிப் பார்த்தபோது, 1200 ரூபாய் இருந்தது. இந்த பணத்தை என்னச் செய்வது? பெரிய பணக்காரர்களான தங்கள் பெற்றோருக்கு அது தேவையில்லை என்று கூறிய 10 வயது சந்திரன்,  'அந்த பணத்தைச் சேர்த்து வைத்து ஏதாவது பெரிதாக பிறகு வாங்கலாம்' என்றான். 'இல்லையில்லை, இயேசு பிறந்த விழாவுக்கு வந்த பணத்தை இயேசு பாலனுக்கே கொடுத்து விடுவோம்' என்றுரைத்த 7 வயது நிலா, அந்த வீட்டில் வேலைச் செய்யும் காயத்ரியிடம் கொடுத்து, அவரின் குழந்தைக்கு புத்தாண்டு துணி வாங்கச் சொன்னாள், பெரிய மனுஷியாக. கண்களில் கண்ணீர் ததும்ப, இதனை, காயத்ரி அவர்கள், சந்திரன் மற்றும் நிலாவின் பெற்றோரிடம் கூறியபோது, அவர்களின் கண்களும் ஆனந்தக் கண்ணீரால் நிறைந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.