2017-12-26 15:30:00

வெறுப்பை, பாகுபாட்டை களைந்தெறியுங்கள், கர்தினால் தாக்லே


டிச.26,2017. பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு எதிரான காழ்ப்புணர்வையும், பாகுபாட்டையும் களைந்தெறியுங்கள் என்று, மணிலா கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலா பேராலயத்தில் நிறைவேற்றிய கிறிஸ்மஸ் பெருவிழாத் திருப்பலியில், இவ்வாறு கேட்டுக்கொண்ட கர்தினால் தாக்லே அவர்கள், அந்நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மராவி பிரச்சனையால் தூண்டிவிடப்பட்டுள்ள, முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

பிலிப்பீன்ஸ் மக்கள், அமைதிக்குத் தடையாய் இருக்கும் எல்லாவற்றையும் உதறித்தள்ள வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் தாக்லே அவர்கள், கிறிஸ்தவர்கள் நம்பிக்கையோடு ஒன்றிப்பை நோக்க வேண்டும் என்று கூறினார்.

நம்மைப் பிரிக்கின்ற மற்றும், அடிக்கடி வன்முறைக்கும், புறக்கணிப்புக்கும் இட்டுச் செல்கின்ற சுவரை அழித்து, உறவுகளைக் கட்டியெழுப்புவோம் என்றும், நம்மிலிருந்து வித்தியாசமாகத் தெரியும் மக்களைப் பாகுபடுத்தும் போக்குகளைத் திருத்திக்கொள்வோம் என்றும்,  கர்தினால் தாக்லே அவர்கள் வலியுத்தினார்.

இயேசுவுக்குச் சாட்சிய வாழ்வு வாழ்வதே, ஆலயம் செல்வோருக்குத் தேவைப்படுகின்றது என்றும் கூறிய மணிலா கர்தினால், நம் அன்றாட வாழ்வில் இயேசுவைப் பின்சென்று நடக்க வேண்டும் என்றும், கிறிஸ்மஸ் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : CBCP /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.