2017-12-22 14:17:00

பாசமுள்ள பார்வையில்: கணவனும் மனைவியும் விட்டுக்கொடுக்கவில்லை


அவன் பிறந்ததிலிருந்து தாயைப் பார்த்ததேயில்லை. ஆனால், தன் தாய், எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்  என்பது அவனுக்குத் தெரியும். அவன் தந்தை இளவயதில் குடித்து, ஊர்சுற்றி, அம்மாவைக் கொடுமைப்படுத்தியதால், அம்மா அவரை விட்டுப் பிரிந்து சென்றதாக தந்தையே அவனிடம் கூறியுள்ளார். அம்மா, பிரிந்தபின்தான் தந்தை குடியை நிறுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், அவனுக்குத் தெரிந்து, அவன் தந்தை குடித்ததில்லை. படித்து முடித்து வேலைக்குப் போகத் துவங்கிய காலத்தில், தன் தந்தை இறந்ததைத் தொடர்ந்து, தன் தாயை பார்க்கத் துடித்தான் அவன். தன் தாயின் இளவயது தோழி வழியாக முகவரியைப் பெற்று, தாயைப் பார்க்க சேலம் சென்றான். அவனைப் பார்த்தவுடனேயே, அவன் தாய்க்கு அடையாளம் தெரிந்து விட்டது. ஏனெனில் அவனுக்குத் தெரியாமலேயே பலமுறை அவனை பள்ளியிலும் கல்லூரியிலும் வந்து பார்த்திருக்கிறார்களாம். 'அப்பா உங்களிடம் கொடுமையாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்கிறேன்’ என்றான் அவன். தாய் சொன்னார்: 'எப்போதப்பா, உன் தந்தை என்னைக் கொடுமைப்படுத்தினார்?  அவர் ஒரு நாள் கூட என்னிடம் கோபப்பட்டதில்லை. அவருக்கு, மதுபான பழக்கமோ, புகையிலைப் பழக்கமோ, எதுவும் இருந்ததில்லை. என்னை, பொன் போல்தான் வைத்திருந்தார். வேலை விடயமாக பல ஊர்களுக்கும் சென்று வருவார். நான் தான், நீ 6 மாத குழந்தையாக இருந்தபோது, இளம் வயது சபலத்தால், இன்னொருவருடன் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன். தான் குடிகாரன் என்றும், கொடுமைக்காரன் என்றும், தன்னைப்பற்றி உன் அப்பா சொன்னதெல்லாம் பொய். என்னைப்பற்றி, அதாவது, உன் அம்மாவைப் பற்றி, நீ தப்பாக எண்ணக்கூடாது என்பதற்காகவே, இப்படி ஒரு பொய்யைச் சொன்ன அந்த உத்தமரோடு, நான்தான் வாழக் கொடுத்து வைக்கவில்லை' என்று.

தந்தை, ஏன் என்னிடம் தன்னையே தாழ்த்தி, பொய் கூற வேண்டும்?

அப்பாவைப் பற்றிய இந்த உண்மைகளை அம்மா மறைத்திருக்கலாமே. ஏன் என்னிடம் கூறி, தன்னைக் களங்கப்படுத்த வேண்டும்?

தன் பெற்றோரின் மதிப்பு அவன் மனதில் இப்போது அதிகரித்திருந்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.