2017-12-21 14:39:00

பாசமுள்ள பார்வையில்.. எப்போதும் திறந்திருக்கும் தாயின் இதயம்


வயது முதிர்ந்த ஓர் ஏழைத் தம்பதியர், ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் இரவு மழை கொட்டியது. அத்தம்பதியர் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் யாரோ திடீரென்று கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. அந்த அம்மா கஷ்டப்பட்டு எழுந்தபோது, முதியவர், யாராவது வழிப்போக்கர் வந்திருப்பார், நமக்கே இடம் இல்லை, நீ படு என்றார். அதற்கு அந்த அம்மா, மனதில் இடம் இருந்தால் இந்த ஓலைக் குடிசையையே மாளிகை மாதிரி நம்மால் உணர முடியும். இதுவரை இந்தக் குடிசையில் இருவர் படுத்திருக்கிறோம். மூன்று பேர் நிச்சயமாக படுக்க முடியாது. ஆனால் குறைந்தது மூன்று பேர் உட்காரலாம் என்று சொல்லிக் கதவைத் திறந்தார்கள். சிறிது நேரம் சென்று, இன்னும் இருவர் வந்து கதவைத் தட்டினார்கள். அப்போது அங்கு ஏற்கனவே அடைக்கலம் தேடியிருந்த மனிதர், ஏற்கனவே இங்கு இடமில்லை, எதற்காகக் கதவைத் திறக்க வேண்டும் என்றார். அதற்கு அந்த அம்மா, அன்புதான் உங்களுக்கு இடம் கொடுத்தது. அந்த அன்பு இன்னும் இருக்கின்றது. அது உங்களோடு முடிந்து போகவில்லை. நாம் இப்போது விலகித்தானே உட்கார்ந்து இருக்கின்றோம். இனிமேல் கொஞ்சம் நெருங்கி உட்காரலாம், தயவுசெய்து கதவைத் திறந்துவிடுங்கள் என்றார். ஒரு வழியாய் ஐந்து பேரும் சமாளித்து உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் ஆனது. மீண்டும் கதவை முட்டும் சத்தம் கேட்டது. ஒரு கழுதை உடம்பெல்லாம் நனைந்து குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. அப்போது அந்த விருந்தாளி நபர்கள், ஐயோ கழுதைங்க, அதுக்காக நாம் கதவைத் திறந்துவிட வேண்டியதில்லை என்றார்கள். இங்கே மிருங்கங்களைக்கூட மனிதர்களாக நடத்தித்தான் எங்களுக்குப் பழக்கம். தயவுபண்ணி அதைத் திறந்துவிடுங்கள் என்று தம்பதியர் இருவருமே கேட்டனர். இங்கு இடம் இல்லையே என்று அந்த மூவரும் திரும்பவும் கத்தினர். அப்போது அந்த அம்மா, இங்கே நிறைய இடம் இருக்கின்றது. நாம் எல்லாரும் உட்காருவதற்குப் பதிலாக எழுந்து நிற்கலாம், கவலைப்படாதீர்கள், அப்படி எதுவும் தேவைப்பட்டால் நான் குடிசைக்கு வெளியில் இருந்துகொள்கிறேன் என்றார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.