2017-12-21 14:55:00

கிறிஸ்மஸ்க்கு ஒரு முன் தயாரிப்பு


டிச.21,2017. கிறிஸ்தவர்கள், இன்னும் ஓரிரு நாள்களில் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைச் சிறப்பிக்க உள்ளனர். அதற்குரிய அண்மைத் தயாரிப்புகளும் நடந்து வருகின்றன. இந்தத் தயாரிப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி உரையாற்றுகிறார், அருள்பணி இலாரன்ஸ் சகாயராஜ், திண்டுக்கல் மறைமாவட்டம்.

வத்திக்கான் வானொலி வழியாகக் கிறிஸ்து பிறப்புப் பற்றிய செய்திகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் நம் தமிழ் உறவுகளுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். லூக்கா 1:10 “…மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கிறேன்”என்று வானதூதர் இடையர்களுக்கு சொன்னதை வாசிக்கிறோம். மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் மகிழ்ச்சியில்லாத, எதிர்மறைச் செய்தியை என்னவென்று நாம் புரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும். தொடக்கத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்த  போது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே ஆழமான அன்புறவு இருந்தது, மகிழ்ச்சியான உறவாக இருந்தது. 100 விழுக்காடு முழுமையானதாக இருந்தது. ஆனால் மனிதர்களின் கீழ்ப்படியாமையால் அந்த அன்புறவில் பிளவு ஏற்படுகிறது. உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதன் விளைவு: பாவம், துன்பம், சாவு ஏற்படுகிறது. அதன் பிறகு கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகமானதே தவிர குறையவே இல்லை. இதுதான் அந்த எதிர்மறைச் செய்தி. மகிழ்ச்சியற்ற செய்தி.

மகிழ்ச்சிக்கு எதிரான துன்பத்திலிருந்து, தூய்மைக்கு எதிரான பாவத்திலிருந்து, வாழ்வுக்கு எதிரான சாவிலிருந்து நம்மை மீட்க மனிதராகப் பிறந்தவர்தான் நம் ஆண்டவர் இயேசு. அதுதான் மகிழ்ச்சியூட்டும் மாபெரும் நற்செய்தி. இழந்த உறவை மீட்டு இறைவனுக்கும் நமக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வந்தவர் இயேசு. இதனைத்தான் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம். பொதுவாக கிறிஸ்து பிறப்புப் பற்றி விவிலியத்தில் எங்கே வாசிக்கிறோம் என்று கேட்டால், உடனே புதிய ஏற்பாடு மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தி என்போம். ஆனால் மீட்பரின் பிறப்பு அங்கே ஆரம்பமாகவில்லை. மாறாக, தொ.நூல் 3:15ல் ஆரம்பிக்கிறது. கடவுள் பாம்பைப் பார்த்து சொல்கிறார், “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையை நசுக்கும்”. அதாவது பாவம், துன்பம், சாவு இவற்றை நசுக்க, அழிக்க மீட்பர் வாக்களிக்கப்படுகிறார். எனவே அன்றே வாக்களிக்கப்பட்ட மீட்பரின் பிறப்பு விழாவைக் கொண்டாட நாம் பல தயாரிப்புகளை மேற்கொள்கிறோம். ஆனால் அவையனைத்தும் பல நேரங்களில் வெளியடையாளங்களாகவே அமைந்து விடுகின்றன. உண்மையிலேயே அவை மனதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. இறை - மனித உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய நம் இயேசு என்ன செய்தார் எனத் தெரிந்தால், நம் தயாரிப்பு இன்னும் அர்த்தமுள்ளவையாக அமையும். தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:6 ல் சொல்கிறார், “கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.” மனிதனை பாவம், துன்பம், சாவு இவற்றிலிருந்து மீட்க, தனது கடவுள் தன்மையை விட்டுவிடுகிறார். எல்லா வல்லமையையும் கொண்ட இறைத்தன்மையை விட்டுவிட்டு, எதுவும் செய்ய இயலாத மனிதானாகப் பிறக்கிறார். இவ்வுலகின் மீது எல்லா அதிகாரங்களையும் கொண்டவர், மனித அதிகாரத்திற்கும், காலத்திற்கும் உட்பட்டு பிறக்கிறார். வல்லமை, ஆற்றல், அதிகாரம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறார். ஆனால் அந்த மீட்பரின்  பிறப்பு விழாவைக் கொணடாடும் நாம் எதையுமே விட்டுவிடுவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை. கிறிஸ்து பிறப்பு குடில் அமைக்க நமது கருத்துக்களைப் பிறர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதன்பிறகு ஒத்துழைப்புக் கொடுக்க மறுக்கிறோம். பாடல் பயிற்சியின்போது ஏற்படும் பகைமை, மனவருத்தம் பல கிறிஸ்து பிறப்பு விழாக்களையும் தாண்டி மனதில் குடியிருக்கும். உறவினர்களோடு நமக்கு ஏற்பட்ட காயம் பல தலைமுறைக்கும் நீடிக்கும். இப்படி நமது கோபம், ஆணவம், அகங்காரம், பொறாமை இவற்றை விட்டுக்கொடுக்க முன்வருவதில்லையெனில், நமது தயாரிப்பு குறைபாடுள்ளதாகவே அமைகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே பரிசுப்பொருள்களைப் பரிமாற்றம் செய்வதும், வாழ்த்து அட்டைகளை அனுப்புவதும் நடைமுறையில் காண்கிறோம். ஆனால் இவை மட்டுமே கிறிஸ்து பிறப்பு விழாவிற்கான மனநிறைவைத் தருவதில்லை. மாறாக யாருக்கு எதைச் செய்தால் நாமும் இயேசுவின் பிறப்பு விழா மகிழ்ச்சியில் பங்குபெற முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

-               ஆடையில்லாதவர்களுடன் ஆடைகளைப் பகிர்வது – நமக்கு தேவையில்லாத, பழைய, கிழிந்த ஆடைகளையல்ல, மாறாக பிறர் பயன்படுத்தும் அளவுக்கு நல்ல ஆடைகளை வழங்குவதுதான் சிறந்தது.

-               உணவில்லாதவர்களுக்கு உணவளிப்பது – நம்மால் சாப்பிட இயலாத, கெட்டுப்போன உணவுகளையல்ல, மாறாக, பிறர் சாப்பிடக்கூடிய அளவுக்கு நல்ல உணவைக் கொடுக்க வேண்டும்.

-               நோயுற்றோருக்கும், சிறையிலிருப்போருக்கும் ஆறுதல் சொல்வது.

-               ஏழை, எளிய மாணவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வது

-               இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பணம் மற்றும் பொருளதவி செய்வது, என பல்வேறு வகைகளில் நாம் கிறிஸ்து பிறப்பு விழாவை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடலாம். இவற்றை நீங்கள் செய்தால் எனக்கே செய்கிறீர்கள் என்று சொல்கிறார் இயேசு.

கிறிஸ்து பிறப்பு விழாவின் முக்கிய நோக்கமே “நம்பிக்கையும் நிலைவாழ்வும்”என்று, யோவான் 3:16-17ல் வாசிக்கிறோம், “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார்.” ஒவ்வொரு கிறிஸ்து பிறப்பு விழாவும் நமது நம்பிக்கையை ஆழப்படுத்த வேண்டும். ஆனால் நாம் நம்பிக்கைக் குறைவில் வளர்ந்து வருகிறோம்.

நாம் உடல் நோய்களால் துன்புறும்போது, குடும்பப் பிரச்சனைகளால் மூழ்கும் போது, மனவேதனையில் தவிக்கும்போது, தொடர்ந்து செபித்தும் கிடைக்காதபோது, அறிவியல் தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கத்தின்போது என்று, நமது நம்பிக்கை குறைந்து போகிறது. தந்தையாம் கடவுள் மீட்பர் இயேசுவை அனுப்பிய நோக்கமே இயேசுவை நம்பவும் நிலைவாழ்வு பெறவுமே என்று நாம் அறிந்துள்ளோம். ஆனால் பல சூழ்நிலைகள் இந்த நம்பிக்கையை எடுத்துவிடுகின்றன.

பிறக்கப்போகின்ற ஆண்டவர் இயேசு, நமது நம்பிக்கையை வளர்க்க அருள்தருவார். நமது தாயரிப்பு வெளியடையாளங்களாக இல்லாமல் உள்ளம் சார்ந்த, வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் தயாரிப்பாக அமைய முயற்சி எடுப்போம். நமது குடும்பங்கள், உறவுகள் கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியால் நிரம்பட்டும். நமது சமுதாயம், நாடு, உலகம் அனைத்தும் கிறிஸ்து பிறப்பின் அமைதியை சுவைக்கட்டும்.

சண்டை சச்சரவுகள், வருத்தங்கள், காயங்கள் நீங்கி மன நிறைவடையட்டும். ஒட்டுமொத்தமாக  நமது கிறிஸ்து பிறப்பு தயாரிப்பு நம்மை சக மனிதர்களோடும், இறைவனோடும் நல்லுறவை ஏற்படுத்தட்டும். கிறிஸ்து நம் மீட்பர் என்ற நம்பிக்கை ஆழப்படட்டும். இறுதியாக, “இழந்து போனதைத் தேடி மீட்கவே இயேசு வந்திருக்கிறார்.” இழந்த நமது நம்பிக்கையை, மகிழ்ச்சியை, முறிந்த உறவுகளை மீட்பர் இயேசு மீட்டருள்வாராக.

மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்களையும், வெற்றி நிறைந்த, வளமையான புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.