2017-12-21 16:04:00

எங்கள் தந்தாய் தொலைக்காட்சி நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ்


டிச.21,2017. இறைவனைத் 'தந்தை' என்று அழைத்து செபிப்பதற்கு தனிப்பட்ட துணிவு தேவை என்றும், அந்தத் தந்தை, எல்லா வேளைகளிலும் நம்முடன் துணை வருபவர், நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மாலை ஒளிபரப்பான ஒரு தொலைகாட்சி நிகழ்வில் கூறினார்.

இத்தாலியின் டிவி2000 என்ற தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து வழங்கிய 'எங்கள் தந்தாய்' என்ற நிகழ்வில், கடந்த சில வாரங்களாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நேர்காணல், ஒவ்வொரு புதன் கிழமையும் மாலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரின் இறுதிப் பகுதியாக, டிசம்பர் 20 இப்புதனன்று பேசிய திருத்தந்தை, இறைவனைத் தந்தை என்று அழைத்து உறவு கொள்வதில் அடங்கியுள்ள சவால்கள் குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

தான் ஆயராகப் பணியாற்றிய வேளையில், ஒருமுறை ஒப்புரவு அருள் சாதனம் பெற வந்திருந்த வயதான ஒரு பெண்மணியின் வழியே, நாம் அனைவரும் பாவிகள் என்பதையும், இறைவனால் மன்னிக்க முடியாத பாவங்கள் என்று எதுவுமில்லை என்பதையும் தான் கற்றுக்கொண்ட நிகழ்வைப் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.

இத்தாலியின், பதுவை நகரில், சிறைக்கைதிகள் நடுவே பணியாற்றிவரும் ஆன்மீக வழிகாட்டி அருள்பணி மார்கோ போஸ்ஸா அவர்களுடன் திருத்தந்தை மேற்கொண்டுவந்த நேர்காணல்கள், கடந்த ஒன்பது வாரங்களாக ஒளிபரப்பாயின.

மேலும், "அன்பு இல்லையெனில், நமது வாழ்வும், நம்பிக்கையும் மதிப்பற்றவை" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 21, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.