2017-12-20 16:13:00

வத்திக்கான் தொடர்புத் துறையின் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்


டிச.20,2017. இறைவனின் தூதர் கொணர்ந்த செய்தியைக் கேட்போர் பல வழிகளில் பதிலிருக்கின்றனர் என்பதை விவிலியத்தின் பல இடங்களில் நாம் காண்கிறோம் என்று, வத்திக்கான் தொடர்புத் துறையின் தலைவர் அருள்பணி Dario Viganò அவர்கள், இச்செவ்வாயன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

வத்திக்கான் தொடர்புத் துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தருணமாக, இச்செவ்வாயன்று, புனித பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றிய அருள்பணி Viganò அவர்கள், திருப்பலியில் வாசிக்கப்பட்ட வாசகங்களை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

மனோவாகு, மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வானதூதர் சொன்ன வார்த்தைகளை பணிவுடன் ஏற்றுக்கொண்டது, நம்பிக்கையுடன் இறைவனின் செய்திக்குச் செவிமடுக்கும் பாடத்தை நமக்குச் சொல்லித் தருகிறது என்று அருள்பணி Viganò அவர்கள், எடுத்துரைத்தார்.

யோவானின் பிறப்பைக் குறித்து, செக்கரியாவுக்கு வானதூதர் கூறியபோது, "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" (லூக்கா 1:18) என்று செக்கரியா வானதூதரிடம், கேட்பது, நம் அனைவரின் உள்ளங்களிலும் இருக்கும் சந்தேகங்களின் எடுத்துக்காட்டாக அமைகிறது என்று அருள்பணி Viganò அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு பதிலிறுப்புக்களை மக்கள் அளித்தபோதிலும், மனிதர்களின் நம்பிக்கையின்மையையும் கடந்து, மீட்பைக் கொணர்வதில், இறைவன் ஒருபோதும் தளரவில்லை என்பதைக் கூறும் அழகிய காலம், கிறிஸ்து பிறப்பு காலம் என்று அருள்பணி Viganò அவர்கள், வலியுறுத்திக் கூறினார்.

வத்திக்கான் தொடர்புத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், குறிப்பாக, குடும்பங்களில் நோயுற்றோருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்களைத் தெரிவித்து, தன் மறையுரையை நிறைவு செய்தார், அருள்பணி Viganò.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.