2017-12-20 16:24:00

நிலத்தடி வெடிகளை அகற்றுதல், "உன்னத மனிதாபிமான முயற்சி"


டிச.20,2017. நிலத்தடி வெடிகளை அகற்றும் உன்னதப் பணியால், அனைத்துலக சமுதாயம் அமைதியை நோக்கி இணைந்து வந்துள்ளது என்றும், படைப்புடன் நல்லிணக்கத்தை உருவாக்கியுள்ளது என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், நிலத்தடி வெடிகளை அகற்றும் ஒப்பந்தம் குறித்து, வியன்னாவில், டிசம்பர் 18, இத்திங்கள் முதல், 21, இவ்வியாழன் முடிய நடைபெறும் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

அண்மைய ஆண்டுகளில் நிலத்தடி வெடிகளால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்ற ஒரு காரணம், இந்தக் கொடுமையை முற்றிலும் ஒழிக்கும் அவசியத்தையும், அவசரத்தையும் நமக்கு நினைவுறுத்தி வருகிறது என்று அருள்பணி Urbańczyk அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

நிலத்தடி வெடிகளை அகற்றுதல், "உன்னத மனிதாபிமான முயற்சி" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை தன் உரையில் எடுத்துரைத்த அருள்பணி Urbańczyk அவர்கள், அனைத்து வகையான ஆயுதங்களின் அழிவே, முழுமையான மனித முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்று வலியுறுத்தினார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.